கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு
தேசிய பூங்காக் கழகம், சென்ற ஆண்டில் இருந்து சாங்கி கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் கூடுதலான அதிகாரிகளையும் தொண்டூழியர்களையும் பணியில் ஈடுபடுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
விடுமுறைக் காலங்களில் கடற்கரைகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவர்களிடம் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது நோக்கம்.
கடற்கரைகளில் காணப்படும் கடல்வாழ் உயிரினங்களைத் தொடுவதோ நசுக்குவதோ அவற்றைச் சேகரிப்பதோ கூடாது என்று பொதுமக்களிடம் அதிகாரிகளும் தொண்டூழியர்களும் நினைவுபடுத்துவர்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார். கடற்கரைக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
கொவிட்-19: பேருந்துகளுக்குக் காத்திருக்கும் நேரம் கூடியது
பேருந்து ஓட்டுநர்களிடையே கொவிட்-19 கிருமிப்பரவல் அண்மையில் அதிகரித்ததைத் தொடர்ந்து, சுமார் 90 பேருந்துச் சேவைகளுக்குப் பயணிகள் காத்திருக்கும் நேரம் மூன்று நிமிடம் கூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் சீ ஹொங் டாட் நாடாளுமன்றத்தில் நேற்று இதனைத் தெரிவித்தார்.
அத்தியாவசியப் பேருந்துச் சேவைகள் தொடர்ந்து இயங்குவதை உறுதிசெய்யும் நோக்கில், சேவைகளுக்கு இடையிலான இடைவெளி நீட்டிக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். முதலில் குறைவான தேவையுடைய பேருந்துச் சேவைகளுக்கு அந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமூக அளவில் கிருமித்தொற்று அதிகரிக்கும் வேளையில், பேருந்து ஓட்டுநர்களில் சுமார் ஐந்து விழுக்காட்டினர் கொவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலப் போக்குவரத்து ஆணையமும் பொதுப் போக்குவரத்து நிறுவனங்களும் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் சாத்தியமான இடங்களில் மாடிப் பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிருப்பதாகவும் மூத்த துணை அமைச்சர் தெரிவித்தார்.
அதிக சூரிய மின்சக்தி பயனீட்டுக்கு முயற்சி
சிங்கப்பூரில் நிறுவனங்கள் சூரியசக்தியைப் பயன்படுத்துவதற்கான மேலும் பல சாத்தியக்கூறுகள் குறித்து ஜூரோங் நகராண்மைக் கழகம் ஆராய்ந்து வருகிறது. வர்த்தக, தொழில் துணையமைச்சர் லோ யென் லிங் நாடாளுமன்றத்தில் நேற்று இந்தத் தகவலை வெளியிட்டார்.
குறிப்பாக, குறுகிய காலக் குத்தகைகளை வைத்திருக்கும் குத்தகைதாரர்கள், வாடகைதாரர்கள் ஆகியோரிடையே சூரியசக்திப் பயன்பாட்டை வலியுறுத்தும் வழிவகைகளைக் கழகம் ஆராய்ந்து வருகிறது என்றார் அவர்.
2020ல் நடப்புக்கு வந்த திட்டத்தின்கீழ், 15 ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடுதலான எஞ்சிய குத்தகைக் காலமும் குறைந்தது 800 சதுர மீட்டர் தொடர்ச்சியான மேற்கூரையும் உடைய வாடகைதாரர்கள் சூரியசக்தித் தகடுகளைப் பொருத்தவேண்டியது கட்டாயம்.

