ஆண்களுக்கிடையிலான பாலியல் உறவைக் குற்றமாக வகைப்படுத்தும் குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 377ஏ தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. அனால், அதைக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் அனுமதியுடன் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடும் ஆண்கள் மீது வழக்கு தொடரமுடியாது என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டது.
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் உட்பட ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. இந்த சட்டப் பிரிவுக்கு எதிராக மூன்று ஆடவர்கள் சட்ட ரீதியாக எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தீர்ப்பளிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற தனியார் மருத்துவர் டாக்டர் ரோய் டான் செங் கீ, 'டிஸ்க் ஜாக்கி' எனும் இசைப் படைப்புக் கலைஞர் திரு ஜான்சன் ஓங் மிங், திரு பிரயன் சூங் ஆகியோர் சட்டப் பிரிவு 377ஏ-க்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
திரு ரோய் டான் செங் கி, 'எல்ஜிபிடி' உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர். திரு பிரையன் சூங், லாப நோக்கில்லா 'எல்ஜிபிடி' அமைப்பான 'ஊகாச்சாகா'வின் முன்னாள் நிர்வாக இயக்குநர்.
2007ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்ட அம்சங்கள், 2018ஆம் ஆண்டு அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி லூசியன் வோங் வெளியிட்ட செய்தி அறிக்கை ஆகியவை கருத்தில்கொள்ளப்படுவதால் சட்டப் பிரிவு 377ஏ-யை அதிகாரபூர்வமாக செயல்படுத்த இயலாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் வலியுறுத்தியது.
1938ஆம் ஆண்டு வரையப்பட்ட சட்டப் பிரிவு 377ஏ, 12வது விதிமுறையை மீறுவதாக இந்த மூன்று ஆடவர்களும் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் நீதிமன்றத்தில் வாதிட்டனர். 12வது விதிமுறை சமத்துவத்தைக் குறிக்கிறது என்பது இவர்களின் வாதம். அதனால் இந்த சட்டப் பிரிவு அகற்றப்படவேண்டும் என்று கூறினர்.
இந்த சட்டப் பிரிவு, ஆண் ஓரினக் காதலர்களுக்கிடையே இருக்கும் பாலியல் உறவை மட்டும்தான் குற்றம் என்று வகைப்படுத்துகிறது; பெண் ஓரினக் காதலர்கள், ஓரினக் காதலர்கள் அல்லாதவர்கள் ஆகியோருக்கிடையிலான பாலியல் செயல்களைக் குற்றங்களாக வகைப்படுத்தவில்லை என்பது இவர்களின் வாதம்.
சட்டப் பிரிவு 377ஏ-க்குக்கீழ் ஓர் ஆண் மற்றோர் ஆணுடன் பாலியல் ரீதியான செயலில் ஈடுபடுவது குற்றமாகும். பொது இடங்கள் மட்டுமின்றி தனியாக இருக்கும்போதும் அத்தகைய செயல்களில் ஈடுபடுவது குற்றம்.
அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக ஈராண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
பாலியல் செயல்களில் ஈடுபடும் பெண்களைத் தண்டிக்கமுடியாது; அதனால் இந்த சட்டப் பிரிவின்கீழ் ஆண்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுகின்றனர் என்பது இந்த மூன்று ஆடவர்களின் வாதம்.