இன்று முதல் பாலியல் குற்றங்களைப் புரிவோருக்கு மேலும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம்.
குற்றவியல் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேறின. அதைத் தொடர்ந்து இனி மானபங்கப்படுத்துவோருக்கு மேலும் கடுமையான தண்டனைகளை விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
திருத்தங்கள் செய்யப்பட்ட குற்றவியல் சட்டம் இன்று முதல் நடப்புக்கு வருவதை உள்துறை, சட்ட அமைச்சுகள் கூட்டு அறிக்கையின் மூலம் தெரிவித்தன.
மானபங்கச் சம்பவங்களும் ஒருவருக்குத் தெரியாமல் தவறான முறையில் ரகசியமாகப் படமெடுக்கும் செயல்களும் சென்ற ஆண்டு அதிகரித்தன.
சென்ற ஆண்டு 1,480 மானபங்கச் சம்பவங்கள் இடம்பெற்றதாக காவல்துறை ஆண்டுதோறும் வெளியிடும் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. 2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1,321ஆகப் பதிவானது.
சென்ற ஆண்டு பதிவான தவறான முறையில் ஒருவரை ரகசியமாகப் படமெடுக்கும் சம்பவங்களின் எண்ணிக்கை 467. இது, அதற்கு முந்தைய ஆண்டில் பதிவான எண்ணிக்கையைவிட அதிகம்.

