'சமரச மன்றத் தீர்ப்புகளில் தலையிடமாட்டோம்'
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் சுமார் 20 விழுக்காட்டு சமரச மன்றத் தீர்ப்புகளில் மட்டும்தான் சிங்கப்பூர் நீதிமன்றங்கள் தலையிட்டுள்ளன. அப்படி இருக்கையில் தாமதம் ஏற்பட்ட ஒரு கட்டுமானத் திட்டத்திற்காக 80 மில்லியன் வெள்ளி இழப்பீடு கேட்டு எழுந்த விவகாரத்தின் தொடர்பில் வழங்கப்பட்ட சமரச மன்றத் தீர்ப்பில் நீதிமன்றம் தலையிடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று சிங்கப்பூரின் நீதிமன்றம் ஒன்று கூறியுள்ளது.
சமரச மன்றம் வழங்கும் தீர்ப்புகளை நீதிமன்றங்கள் மாற்றுவது சிங்கப்பூரில் அதிகம் நடக்காத ஒன்று. குறிப்பிட்ட விவகாரங்களில் மட்டும்தான் நீதிமன்றங்கள் அவ்வாறு செய்திருப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆண்ட்ரூ ஃபாங் தெரிவித்தார். அவரையும் நீதிபதி ஜுடித் பிரகாஷையும் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் சார்பில் அவர் பேசினார்.
பெயர் குறிப்பிடப்படாத நாட்டில் ஓர் ஆலையைக் கட்டுவது குறித்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து இந்த நீதிமன்றம் நிலைமையை விளக்கியது.
ஓவியங்களைப் படைத்த சிறப்புத் தேவையுடையோர்
மேடைப் பேச்சில் அனுபவம் இல்லாத எட்டு ஓவியர்கள் 100க்கும் அதிகமானோரின் முன்னிலையில் தங்களின் ஓவியங்களை மெய்நிகர் முறையில் படைத்தனர்
(படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்).
'ஆர்ட்ஸ்@மெட்டா' குழுவைச் சேர்ந்த ஓவியர்களுக்கு மேடைப் பேச்சு திறன்களை வளர்க்க சாங்கி விமான நிலையக் குழுமத்தின் நன்கொடை பிரிவான சாங்கி அறநிறுவனத்தின் முயற்சி இது. 'ஆர்ட்ஸ்@மெட்டா', சிறப்புத் தேவைகள் உள்ள ஓவியர்களைக் கொண்ட குழு.
கிளார்க் கீ ஒன்றுகூடல்: மேலும்
ஆறு பேர் மீது குற்றச்சாட்டுகள்
கிளார்க் கீ பகுதியில் புத்தாண்டுக்கு முதல் நாளன்று கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை வெளிப்படையாக மீறியதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஆறு பேர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படவுள்ளது. அவர்கள் 19லிருந்து 23 வயதுக்கு உட்பட்டவர்கள்.
கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக அவர்களைத் தவிர 11 பேர் ஒவ்வொருவருக்கும் 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்தது. புத்தாண்டுக்கு முதல் நாள் கிளார்க் கீயில் திட்டமிடப்படாத புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. அந்தக் கொண்டாட்டங்களின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன. அந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை மொத்தம் 10 பேர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். 15 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 விதிமுறைகளை மீறிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக ஆறாண்டு சிறைத் தண்டனையும் 10,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.
'எஸ்பிஹெச்' வாக்கெடுப்பு
'கஸ்கேடன் பீக்' நிறுவனம் 'சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ்' (எஸ்பிஹெச்) நிறுவனத்தை வாங்க முன்வந்தது குறித்து இம்மாதம் 22ஆம் தேதியன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 'எஸ்பிஹெச்' பங்குதாரர்கள் வாக்களிப்பர். 'எஸ்பிஹெச்' நிறுவனத்தை வாங்க 'கெப்பல் கார்ப்' நிறுவனம் முன்வந்தது. அதற்குப் போட்டியாக 'கஸ்கேடன் பீக்' முன்வந்தது.
'எஸ்பிஹெச்'சின் ஒவ்வொரு பங்கையும் 2.40 வெள்ளிக்கு வாங்க 'கெப்பல்' முன்வந்தது. 'கஸ்கேடன் பீக்' தர எண்ணும் தொகை 2.36 வெள்ளி. எனினும், 'கஸ்கேடன் பீக்' மொத்தத் தொகையை ரொக்கமாக வழங்கப்போவதாக கூறியது.

