சிங்கப்பூரில் வருமான வரித் தாக்கல் முறை எளிதாக்கப்பட்டு வருகிறது. அதனால் இந்த வரி ஆண்டில் வருமான வரி செலுத்தும் 10ல் ஏழு பேர் விவரத்தாக்கல் செய்யத் தேவையில்லை.
'என்எஃப்எஸ்' எனும் விவரத்தாக்கல் இல்லாத சேவைக்கு 1.6 மில்லியனுக்கும் அதிகமானோர் தகுதிபெறுகின்றனர். இவர்களில் கிட்டத்தட்ட 120,000 பேருக்கு, சென்ற ஆண்டு அறிமுகமான 'டைரெக்ட் நோட்டிஸ் ஆஃப் அசெஸ்மெண்ட்' எனும் நேரடி மதிப்பீட்டு அறிக்கை திட்டத்தின்கீழ் தாங்கள் செலுத்தவேண்டிய வருமான வரி விவரங்கள் நேரடியாக அனுப்பப்படும்.
'ஐராஸ்' எனும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் இதைத் தெரிவித்தது.
இதன்படி இவர்கள் செலுத்தவேண்டிய வரி விவரங்கள் முன்னதாகவே தாக்கல் செய்யப்பட்டிருக்கும்.
மோசடிச் சம்பவங்கள் அதிகமாக நிகழ்வதையொட்டி விழிப்புடன் இருக்குமாறும் உள்நாட்டு வருவாய் ஆணையம் வரி செலுத்துவோரைக் கேட்டுக்கொள்கிறது.

