காதல் மோசடி மூலம் சம்பாதித்த 290,000 வெள்ளியை வைத்திருந்ததாக 47 வயது நூருல் அயின் அப்துல் ஷுகூர் மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஷாகி உணவகத்தின் முன்னாள் இயக்குநரான அவர், 2020ஆம் ஆண்டு டிசம்பரில் 3 சம்பவங்களில் அந்தத் தொகையைப் பெற்றுக்கொண்டதாகவும், குற்றவியல் நடத்தை மூலம் சம்பாதித்த தொகை அது என்று சந்தேகிக்கப்படுவதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
தொகை எங்கிருந்து கிடைத்தது என்பதற்கு உரிய விளக்கம் தர அவர் தவறிவிட்டார்.
இணையக் காதல் மோசடியில் பணத்தை இழந்த 48 வயதுப் பெண் ஒருவர், டிசம்பர் 2020ல் காவல்துறையிடம் புகாரளித்தார்.
இணையத்தில் பழக்கமான ஆடவர், பெண்ணுக்கு அஞ்சல் பொட்டலம் ஒன்றை அனுப்பி இருப்பதாக முதலில் கூறினார். பின்னர் சிங்கப்பூர் சுங்கத் துறைக்குக் கட்டணம் செலுத்தி அதைப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
அதை நம்பி 16,000 வெள்ளி தொகையை இழந்ததாகவும், மீண்டும் பணம் செலுத்தும்படி தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் அந்தப் பெண் புகாரளித்தார்.
காவல்துறை விசாரணையில், மேலும் ஒரு 58 வயதுப் பெண், 274,000 வெள்ளி பணம் செலுத்தியது தெரியவந்தது.
நூருல் தற்போது 15,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மார்ச் 22ஆம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.

