சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் குறையவில்லை

2 mins read
63be12b5-e351-445f-83cd-d1d079974ad5
-

கிருமிப் பரவல் காரணமாக சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு சரியக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2020ஆம் ஆண்டைபோல கடந்த ஆண்டும் 34,200 குழந்தைகள் பிறந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய பிரதமர் அலுவலக அமைச்சரான இந்திராணி ராஜா இதனை தெரிவித்தார்.

"கொவிட்-19க்கு முன்பு 2019ல் பிறந்த குழந்தைகளுடன் ஒப்பிட்டால் நாம் எதிர்பார்த்ததைவிட மூன்று விழுக்காடு மட்டுமேகுறைந்தது," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் தேசிய மக்கள்தொகை மற்றும் திறன் பிரிவுக்கு பொறுப்பு வகிக்கும் இந்திராணி ராஜா, குழந்தை பிறப்பு எண்ணிக்கை நிலையாக இருந்தாலும் சிங்கப்பூரின் மொத்த கருவுறுதல் விகிதம் கடந்த ஆண்டு 1.12க்கு சற்று அதிகரித்தது என்றார்.

குழந்தை பிறக்கும் வயதில் உள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததே அதற்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.

2020ல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கருவுறுதல் விகிதம் 1.1க்கு சரிந்தது.இருந்தாலும் திருமணம், பெற்றோர் ஆவதற்கான விருப்பம் கூடியிருக்கிறது என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் சிங்கப்பூரர்களை ஆதரிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் இரட்டிப்பாகும் என்று கூறிய இந்திராணி ராஜா, தற்போதைய ஆரம்பகால கல்வி, வீட்டுவசதி தவிர மற்ற ஆதரவு திட்டங்களை அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்தார்.

இதுவரை, 44,000 குழந்தைகளின் பெற்றோர், குழந்தை ஆதரவு மானியத்தைப் பெற்று உள்ளனர்.

2020 அக்டோபர் 1ஆம் தேதிக்கும் 2022 செப்டம்பர் 30ஆம் தேதிக்கும் இடையே குழந்தை பிறந்திருந்தால் பெற்றோருக்கு 3,000 வெள்ளி வரை மானியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

குடும்ப வாழ்க்கையத் தொடங்குவதற்கு முன்பே பல தம்பதியர் சொந்த வீட்டை பெற விரும்புவதால் 2022, 2023ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 23,000 வரை தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகள் விற்பனைக்கு வெளியிடப்படுவதாகவும் அமைச்சர் இந்திராணி ராஜா கூறினார்.