இல்லப் பணிப்பெண்களின் ஓய்வு நாளில் தடையற்ற ஓய்வு நேரத்தை வழங்குவது பணிப்பெண்களுக்கு மட்டுமல்லாமல் வெவ்வேறு தேவை உடைய குடும்பங்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.
இதன் காரணமாக ஓய்வு நாளில் பணிப்பெண்களுக்கு குறிப்பிட்ட ேநரத்தை ஒதுக்குவதை மனிதவள அமைச்சு விரும்பவில்லை என்று மனிதவள துணை அமைச்சர் கான் சியோவ் ஹுவாங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒவ்வொரு குடும்பத்தினரும் இல்லப் பணிப்பெண்களும் அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ப ெவவ்வேறு ஏற்பாடுகளை செய்து கொண்டுள்ளனர்.
இதில் முதலாளிகளும் பணிப்பெண்களும் வெளிப்படையாக விவாதித்து ஓய்வு நாளை ஏற்பாடு செய்வதே முக்கியம் என்றார் அவர்.
கடந்த ஜூலை மாதம் இல்லப் பணிப்பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை குறைந்தது ஒரு நாள் கட்டாய ஓய்வு வழங்கும் திட்டத்தை மனிதவள அமைச்சு அறிவித்திருந்தது.
இதனை பணத்தைக் கொடுத்து ஈடுகட்டக் கூடாது என்று முதலாளிகளுக்கு அமைச்சு கூறியிருந்தது. இல்லப் பணிப்பெண்களுக்கு ஓய்வு நாளை வழங்குவதால் அவர்கள் புத்துணர்வுடன் வேலைக்குத் திரும்பவும் வீட்டுக்கு வெளியே தங்களுக்கு ஆதரவான கட்டமைப்புகளை உருவாக்கவும் முடியும் என்று அமைச்சர் கான் தெரிவித்தார்.
இந்தப் புதிய ஓய்வு நாள் கொள்கை, முதலாளிகளும் பணிப்பெண்களும் தங்களுக்கு இடையே ஏற்பாட்டை செய்துகொள்வதற்கு ஏதுவாக இவ்வாண்டு இறுதியில் அமைச்சு அமல்படுத்துகிறது.
தற்போது, வாரம் ஒரு நாள் ஓய்வுக்கு இல்லப் பணிப்ெபண்கள் தகுதி பெறுகின்றனர்.
இருந்தாலும் இந்த ஓய்வு நாளில் பணிப்பெண்கள் வேலை செய்யலாம்.
இதற்கு குறைந்தது ஒரு நாள் சம்பளத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் அல்லது அதே மாதத்தில் வேறு ஒரு நாளில் ஓய்வு நாள் எடுத்துக் கொள்ள அவர்களை அனுமதிக்க வேண்டும்.
நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான லூயிஸ் இங், இல்லப் பணிப் பெண்களுக்கான கட்டாய ஓய்வு நாள் இடைவிடாமல் 24 மணி நேரம் முழுமையாக வழங்கும் திட்டம் உள்ளதா என்று கேட்டார்.
அதற்கு அமைச்சர் கான் நேற்று நாடாளுமன்றத்தில் இவ்வாறு பதில்அளித்தார்.

