பெரும்பாலான சிங்கப்பூரர்கள் மரண தண்டனையை ஆதரிப்பதாக உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
சென்றாண்டு உள்துறை அமைச்சு மரண தண்டனை பற்றி சிங்கப்பூரர்களிடையே ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் 80 விழுக்காட்டுக்கு அதிகமானோர் சில குற்றங்களைத் தடுக்க மரண தண்டனை உதவுகிறது என நம்புகின்றனர்.
கொலை, துப்பாக்கி ஏந்திய குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்கள் புரிபவர்களுக்கு மரண தண்டனையே சரியான தண்டனை என பெரும்பாலானோர் கருதுகின்றனர்.
சிங்கப்பூரில் மரண தண்டனை தொடர்ந்து அவசியம் என அமைச்சர் சொன்னார்.
"யாருக்கும் மரண தண்டனை விதிப்பதில் அரசாங்கத்துக்கு விருப்பமில்லை. ஆனால், சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றால் அதை நாம் செய்துதான் ஆகவேண்டும்", என்றார் திரு சண்முகம்.
மரண தண்டனை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தார்.

