வேலையிடங்களில் பாலினப் பாகுபாட்டையும் தொந்தரவு செய்யும் நடவடிக்கைகளையும் ஒழிக்க சிறிய, நடுத்தர நிறுவனங்களும் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசும் இணைந்து செயல்படுகின்றன.
இதன் தொடர்பில் இந்த வாரம் சில இணக்கக் குறிப்புகள் கையெழுத்தாகும். அவை, 22 சிறிய, நடுத்தர நிறுவனங்கள், தேசிய தொழிற்சங்க காங்கிரசின் ஆலோசகர்களைத் தொடர்புகொள்ள வகைசெய்யும். மேலும், சம்பந்தப்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்களால் தொழிற்சங்க காங்கிரசின் வளங்களைப் பயன்படுத்தமுடியும்.
ஊழியர்களின் புகார்களைக் கையாளும் முறைகள், ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான திட்டங்கள் வரையப்படும்போது இந்த ஏற்பாடு கைகொடுக்கும்.
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குப் பயன்படக்கூடிய பயிற்சி வளங்கள், இணையக் கலந்துரையாடல்கள், மாதிரி மனிதவள கொள்கை வழிகாட்டி ஆகியவற்றையும் தொழிற்சங்க காங்கிரஸ் வழங்கும்.
'யு வாஃப்' எனும் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் மகளிர், குடும்பப் பிரிவு இந்த முயற்சியை மேற்கொள்கிறது. இவ்வாண்டு இறுதிக்குள் இன்னும் 60 சிறிய, நடுத்தர நிறுவனங்களை இத்திட்டத்தில் சேர்த்துக்கொள்வது 'யு வாஃப்'பின் இலக்கு என்று தொழிற்சங்க காங்கிரஸ் அறிவித்தது.
சிங்கப்பூரில் வேலை செய்வோரில் சுமார் 70 விழுக்காட்டினர் சிறிய, நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். வேலையிடங்களில் பாலினப் பாகுபாடு இருப்பதாகத் தொழிற்சங்க காங்கிரஸ், சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சியின் மகளிர் பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய கருத்தாய்வில் பங்கேற்ற 23 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் சென்ற மாதம் வரை இணையத்தில் நடத்தப்பட்ட இந்தக் கருத்தாய்வில் 3,097 ஊழியர்கள் பங்கேற்றனர்.
தங்களின் வேலையில் முன்னேற முடியாமல் போனதாக கருத்தாய்வில் பங்கேற்ற 10ல் ஒரு பெண் கூறினார். இது, இவ்வாறு சொன்ன ஆண்களின் எண்ணிக்கையில் இரு மடங்கு.
தாங்கள் நிறுவனங்கள் பெண்களைவிட ஆண்களையே வேலைக்கு எடுக்க விரும்புவதாக 10ல் இரண்டு பெண்கள் தெரிவித்தனர். நிறுவனங்கள் தங்களைவிட பெண்களையே வேலைக்கு எடுக்க விரும்புவதாகச் சொன்ன ஆண்களின் எண்ணிக்கை இதில் பாதி.

