இவ்வாண்டு இதுவரை மட்டும் 'கெரோசல்' மின்வர்த்தகத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடிச் சம்பவங்களில் குறைந்தது 72 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் 109,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளனர்.
'கெரோசல்' தளத்தில் பொருள்களை விற்பவரிடம் ஏமாற்றுக்காரர் தன்னை வாடிக்கையாளராக அடையாளப்படுத்திக்கொள்வார் என்று காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
அதற்குப் பிறகு பொருள்களை வாங்க அந்தத் தளத்தின் மின்கட்டண முறையான 'கெரோபே' வாயிலாகக் கட்டணத்தைச் செலுத்தப்போவதாக ஏமாற்றுக்காரர் கூறுவார்.
அதன் பின்னர் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக ஏமாற்றப்பட்டவருக்கு மின்னஞ்சல் வரும். அந்த மின்னஞ்சல் 'கெரோசல்' அனுப்பியதுபோல் இருக்கும்.
கட்டணத்தைப் பெற மின்னஞ்சலில் உள்ள இணையப்பக்கத்துக்குச் செல்லுமாறு ஏமாற்றப்படுபவர் கேட்டுக்கொள்ளப்படுவார். அதற்குச் செல்பவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்குத் தகவல்கள், ஒருமுறை பயன்படுத்தும் மறைச்சொல் போன்ற தகவல்கள் கேட்கப்படும். இவ்வாறு மோசடி நிகழும்.
காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு ஏமாற்றுக்காரர்களின் கணக்குகளைத் தற்காலிகமாக முடக்கியுள்ளதாக 'கெரோசல்' ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.