பங்குனி உத்திரத் திருவிழா - இவ்வாண்டின் விதிமுறைகள்

பங்குனி உத்திரத் திருவிழா - இவ்வாண்டின் விதிமுறைகள்

1 mins read
4678d683-765f-4c7f-aaec-57e67a31adb3
கோப்புப் படம் -

புனிதமரம் பாலசுப்ரமணியர் ஆலயத்தின் இவ்வாண்டு பங்குனி உத்திரத் திருவிழா, வெள்ளிக்கிழமை மார்ச் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கிட்டத்தட்ட 10,000 பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய கொவிட்-19 நிலவரத்தால் இவ்வாண்டு பால்குடங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.

கிருமிப்பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு திருவிழாவில் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாததை அடுத்து, மறு ஆண்டு பால்குடங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு போலவே இவ்வாண்டிலும் அலகு காவடிகளைச் செலுத்துவதற்கு அனுமதியில்லை.

ஆனால், குழந்தைகளுக்கான முடி காணிக்கை செலுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பால்குடம் எடுக்கும் பக்தர்கள் 3,500 முதல் 4,000 வரையிலும், பொது பக்தர்கள் 3,000 முதல் 3,500 வரையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

பால்குடம் செலுத்த விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். அத்துடன் அவர்கள் முழுமையாகத் தடுப்பூசிப் போட்டவர்களாக இருக்கவேண்டும் என்று ஆலயம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆலயத்தில் தயாரிக்கப்படும் பால்குடங்களையே பக்தர்கள் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பால்குடத்திற்காக பதிவு செய்பவர்கள், கூடுதலாக தங்களுடன் செல்ல விரும்பும் ஒருவருக்காகப் பதிவு செய்யலாம்.

ஆலய தரிசனத்திற்கும் முன்பதிவு தேவைப்படும். தரிசனத்திற்காக செல்ல விரும்பும் பக்தர், தான் உட்பட அதிகபட்சமாக ஐந்து பேர் வரைக்காகப் பதிவு செய்யலாம்.