சிங்கப்பூரில் ஒவ்வொரு மாதமும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக ஆறு பெண்கள் மரணம் அடைகின்றனர். 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட பெண்
களிடையே மரணத்தை ஏற்படுத்தும் கொடிய நோய்கள் பட்டியலில் இவ்வகை புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தடுப்பூசி, பரிசோதனை போன்ற சிகிச்சை முறைகளால் இந்த நோயைத் தவிர்க்க முடியும் என்றபோதிலும் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து குறைவாக உள்ளன.
மக்கள்தொகையில் 45 விழுக்காட்டினர் மட்டுமே இந்நோய்க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் அல்லது பரிசோதனை செய்துள்ளனர்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு 'ஹியூமன் பெப்பிலோமாவைரஸ்' (எச்பிவி) எனப்படும் கிருமித்தொற்று முக்கிய காரணமாக உள்ளது.
எச்பிவி கிருமிகளில் 200 வகை இருக்கின்றன. அவற்றில் 14 வகை மிகவும் ஆபத்தானவை.
சிங்கப்பூரில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்
களுக்கு 'டைப் 52' என்று பெயரிடப்பட்டுள்ள கிருமியால் அந்நோய் ஏற்பட்டது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களில் 42.5 விழுக்காட்டினருக்கு 'டைப் 58' கிருமிவகையால் நோய் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய இயக்கம் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது.
இந்த இயக்கம் ஓர் ஆண்டுக்கு நடத்தப்படும். இயக்கத்தை எச்பிவிக்கு எதிராகத் துடிப்புமிக்க நடவடிக்கை கூட்டணி தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறவே இல்லாத நிலையை ஏற்படுத்த கூட்டணி இலக்கு கொண்டுள்ளது.
30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களுக்கு இந்த நோய் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருந்தாலும் அந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் பலர் பரிசோதனை செய்துகொள்ள முன்வருவதில்லை என்று
கூட்டணியின் தொழில்நுட்ப ஆலோசகரான டாக்டர் ஐடா இஸ்மாயில் தெரிவித்தார்.
சமூகச் சுவர் ஓவியங்களைத் தீட்டுவது போன்ற நடவடிக்கைகள் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி கூடுதல் விழிப்புணர்வு ஏற்
படுத்த கூட்டணி விரும்புகிறது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை எதிர்கொள்ள அனைவரும் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதை தெரிவிக்கும் தகவல்கள் சுவர் ஓவியங்களில் இடம்பெறும்.
விழிப்புணர்வை ஏற்படுத்த பாடல் ஒன்றையும் கூட்டணி இயற்றியுள்ளது. அந்தப் பாடலுக்கு நடனமாட பாலிவுட் ஸும்பா
நடனத்தை அது அமைத்துள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை விரிவு
படுத்த மக்கள் கழகத்தின் மகளிர் ஒருங்கிணைப்புக் கட்டமைப்பின் உதவியை கூட்டணி நாடியுள்ளது.
இந்த இயக்கத்துக்கு அனைத்துலக பெபில்லோமாவைரஸ் மன்றம் தலைமை தாங்குகிறது. இயக்கத்தைத் தொடங்கிவைத்துள்ள கூட்டணியை அது தனது சிங்கப்பூர் பங்காளியாக அங்கீகரித்துள்ளது.
"கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட அனைவருக்கும் எச்பிவி கிருமியால் அந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எச்பிவிக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்வதே முதற்கட்ட தற்காப்பாகும். எச்பிவி தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பெண்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய குழந்தைப் பருவ தடுப்பூசித் திட்டத்திலும் தேசிய பெரியவர்கள் தடுப்பூசித் திட்டத்திலும் அதை சுகாதார அமைச்சு சேர்த்துள்ளது," என்று இயக்கத்தின் அறிமுக விழாவில் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் லோ யென் லிங் கூறினார்.
'ஸ்கிரீன் ஃபார் லைஃப்' திட்டத்தை சுகாதார அமைச்சும் சுகாதார மேம்பாட்டு வாரியமும் நடத்துகின்றனர். கர்ப்பப்பை வாய்
புற்றுநோய் உட்பட மற்ற வகை சுகாதாரப் பரிசோதனைகளுக்குச் செல்ல சிங்கப்பூரர்களை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.
பரிசோதனைகளுக்கான கட்டணத்தைக் கட்டுப்படியான விலையில் வைத்திருக்க 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து அவற்றுக்கான மானியங்கள் மேம்
படுத்தப்பட்டுள்ளன.

