16 வயதுக்கும் 25 வயதுக்கும் உட்பட்ட இளையர்கள் குறைவான எண்ணிக்கையில் ரத்த தானம் செய்வதாகச் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தப் போக்கு அக்கறைகுரியது என்று சங்கம் கூறியது.
கடந்த பத்து ஆண்டுகளில் ரத்த தானம் செய்யும் இளையர்களின் எண்ணிக்கை 36 விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறப்பட்டது.
2011 ஆம் ஆண்டு 21,793ஆக இருந்த எண்ணிக்கை சென்றாண்டு 13,969ஆக குறைந்தது.
தற்போதைய சூழலில் ரத்த தானம் செய்பவர்களில் இளையர்களின் எண்ணிக்கை சுமார் 20 விழுக்காடு. பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த விகிதம் 33 விழுக்காடாக இருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் முதுமை அல்லது நோய் காரணங்களால் சுமார் 600 பேர் ரத்த தானம் செய்வதை நிறுத்திக்கொள்கின்றனர். அதனால் ரத்த தானம் செய்ய அதிக இளையர்கள் முன்வருவது முக்கியம் என் சங்கம் குறிப்பிட்டது.
ரத்த தானம் செய்வதால் நோய்கள் தொற்றும், ஊசி குத்தி ரத்தம் எடுப்பது வலியை ஏற்படுத்தும், ரத்த தானம் செய்தால் உடலில் போதிய ரத்தம் இருக்காது போன்ற பல தவறான கருத்துகள் நிலவுவதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின தலைமை நிர்வாகி பென்ஜமின் வில்லியம் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30,000 சிங்கப்பூரர்களுக்கு ரத்தமாற்றம் சிகிச்சை தேவைப்படுவதாக திரு வில்லியம் சொன்னார். அதனால் ரத்த வங்கியில் எப்போதும் ரத்தம் இருப்பது அவசியம் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
ரத்த தானம் செய்வது நம் அனைவருடைய தேசியக் கடமையாக இருக்கவேண்டும்; அது நமக்கு இயல்பாக வரவேண்டும் என்றார் திரு வில்லியம்.