சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம்(படம்) சட்டவிரோதமாக 11.8 மில்லியன் வெள்ளியை ஏமாற்றிப் பெற்ற ஆடவருக்கு ஒன்பது ஆண்டு 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
38 வயது லிம் சிட் ஃபூ, அதன் தொடர்பில் சுமத்தப்பட்ட 20 குற்றச்சாட்டுகளை சென்ற ஜனவரியில் ஒப்புக்கொண்டார்.
உற்பத்தி மானியங்களைப் பெறுவதற்காக 200க்கும் அதிகமான ஷெல் பெட்ரோல் நிறுவனக் கிளைகளை அவர் திறந்தாகவும், சதித்திட்டத்தில் 39 வயது வாங் ஜியாவ், 38 வயது லி டான் இருவரும் லிம்மிற்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்பட்டது.
2015ஆம் ஆண்டு ஏப்ரலில் லிம் அந்த சதித் திட்டத்தை தீட்டினார். நிறுவனங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு, தகுதிபெறும் நிறுவனங்களுக்கு உற்பத்தி மற்றும் புத்தாக்க ஊக்கத்தொகை வழங்கும் 'பிஐசி' திட்டத்தின்கீழ் பொய்யான தகவல்களைத் தந்தார்.
2015க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் மூவரும் இணைந்து 200க்கும் அதிகமான நிறுவனங்களைத் திறந்ததுடன், அவற்றில் நியமிக்கப்பட்ட இயக்குநர்களுக்கு சம்பளமும் வழங்கினர்.
அந்த நிறுவனங்களுக்கு கணினி மென்பொருள் வாங்கியதாகவும், இணையக் கட்டமைப்பை நிறுவியதாகவும் செலவுக் கணக்கு காட்டினர்.
ஓராண்டு காலத்தில் 'பிஐசி' திட்டத்தின் மூலம் 400க்கும் அதிகமான விண்ணப்பங்களைச் செய்தனர்.
உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் தவறான தகவல்களைச் சமர்ப்பித்து 1,793,000 வெள்ளியை அவர்கள் பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய மோசடிக் குற்றம் ஒவ்வொன்றுக்கும் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.
சதியில் உடந்தையாக இருந்த வாங், லி இருவர் மீதும் விசாரணை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
200 பெட்ரோல் நிலையங்கள் திறந்ததாக மானியம் பெற்ற ஆடவருக்கு 9 ஆண்டு சிறை

