சிங்கப்பூர், மக்களின் உணவில் உப்பைக் குறைப்பதற்கு கூடுதல் வழிகளை ஆராய்ந்து வருகிறது. அதன் பொருட்டு, உட்கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்து, இன்னும் நலம் மிக்க வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் வழிகளை சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆராய்ந்து வருகிறது.
உதாரணமாக, சிங்கப்பூரில் மக்கள் அதிகப்படியான உப்பை உட்கொள்வதற்கு அவர்கள் வெளியில் சென்று அதிகம் சாப்பிடுவது ஒரு முக்கிய காரணமாகும். அதனால், குறைவான உப்புகொண்ட மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துவது பற்றி சுகாதாரத் துறை அதிகாரிகள் உணவுச் சேவைத் துறையினருடன் சேர்ந்து பணியாற்றுவர்.
அத்துடன், நீரிழவு நோய், புகையிலைப் பழக்கம் ஆகியவற்றுக்கு எதிரான முயற்சிகளும் தொடரும். அளவுக்கு அதிகமான உப்பை உட்கொள்வதால், ரத்த அழுத்த அபாயம் அதிகரிக்கும். இது மாரடைப்பு, வாதம் போன்ற உடல்நலச் சிக்கல்களை ஏற்படுத்தும்.
இளையவர்கள், முதியவர்கள் என சிங்கப்பூரர்களின் உடல்நலன் பொதுவாகவே குறைந்து வருகிறது என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.