காத்திப் வட்டாரத்திலுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பகுதியில் நேற்று (மார்ச் 9) மாலை ஒரு காட்டுப் பன்றி தாக்கி பெண் ஒருவர் காயமுற்றார்.
புளோக் 848 ஈசூன் ரிங் ரோட்டில் மாலை சுமார் 6 மணியளவில் பன்றி தென்பட்டதாகக் கூறப்பட்டது.
தலைதெறிக்க ஓடிய காட்டுப் பன்றி ஒரு பெண்ணை முதலில் முட்டியது. அதன் பின், ஒரு கடையின் கண்ணாடிக் காட்சிப் பலகையில் முட்டிக்கொண்டதாகச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர்.
முட்டப்பட்ட பெண் தரையிலே சற்று நேரம் கிடந்ததாகக் கூறப்பட்டது.
பலகையில் முட்டிக்கொண்ட பன்றி ரத்தம் சொட்டச்சொட்ட அங்கிருந்து ஓடியதாகச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர்.
ஓடும்போது அது மற்றவர்களை உரசியதாகக் கூறப்பட்டது. ஆனால், வேறு யாருக்கும் காயமில்லை.
காயம் ஏற்பட்ட பெண் மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்லப்பட்டார்.
மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த இடத்தில் காட்டுப் பன்றி எவ்வாறு வந்தது என்பது சரியாகப் புலப்படவில்லை என்று 'ஏக்கர்ஸ்' விலங்கு நல அமைப்பின் துணைத் தலைமை நிர்வாகி அன்பரசி பூபால் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
காட்டுப் பன்றிகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகியே இருக்குமாறு ஏக்கர்ஸ் அமைப்பு பொதுமக்களுக்கு ஆலோசனை விடுத்துள்ளது.

