டெங்கி தொற்று வேகமாகப் பரவுகிறது

டெங்கி தொற்று வேகமாகப் பரவுகிறது

2 mins read
431a396a-b0b5-4f75-a4ae-d2429d15898f
இவ்வாண்டு மார்ச் 5ஆம் தேதி நிலவரப்படி, 1,500க்கும் அதிகமானோருக்கு டெங்கி பாதிப்பு உறுதியானது (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

டெங்கி தொற்றுப் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் எச்சரித்துள்ளது.

மார்ச் 5ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் 264 பேருக்கு டெங்கி பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதற்கு முந்திய வாரத்துடன் ஒப்பிடுகையில், இது 65 பாதிப்புகள் அதிகம்.

இவ்வாண்டு மார்ச் 5ஆம் தேதி நிலவரப்படி, 1,500க்கும் அதிகமானோருக்கு டெங்கி பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக வாரியம் தெரிவித்தது.

கடந்த எட்டு வாரங்களாக டெங்கி பாதிப்புகளின் வார எண்ணிக்கை நிலையாக அதிகரித்து வந்தது.

"சமூகத்தில் ஏடிஸ் எஜிப்தி கொசுப் பெருக்கம் அதிகரித்து இருப்பது கவலைக்குரியது. கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்புநோக்க, இவ்வாண்டு ஜனவரியில் கொசுக்களின் எண்ணிக்கை 9 விழுக்காடு கூடியது," என்று வாரியம் கூறியது.

கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏதுவான சூழலையும் டெங்கி பாதிப்புகளின் எண்ணிக்கையையும் குறைக்க சமூகம் அவசர முயற்சியில் இறங்க வேண்டும் என்று வாரியம் வலியுறுத்தியது.

"பொதுச் சுகாதாரத்துக்குத் தொடர் மிரட்டலாக டெங்கி விளங்குவதால், பொதுமக்களும் இதர பங்குதாரர்களும் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று வாரியம் கூறியது.

'ஏடிஸ் எஜிப்தி' கொசுக்கள் அதிகம் காணப்படும் பகுதிகளில் கருஞ்சிவப்பு நிற பதாகைகள் வரும் வாரங்களில் வைக்கப்படும். வாரியத்தின் கண்காணிப்பு முறையைப் பொறுத்தவரை, மற்ற பகுதிகளைவிட இத்தகைய பகுதிகளில் மூன்று மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக கொசுப் பெருக்கம் அதிகமாக இருக்கும்.

இன்றைய நிலவரப்படி, டெங்கி அபாயமுடைய (சிவப்பு எச்சரிக்கை) 12 இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்தகைய இடங்களில் 10 அல்லது அதற்கும் மேற்பட்டோருக்கு டெங்கி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 45 இடங்கள் மஞ்சள் எச்சரிக்கை பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்தகைய இடங்களில் 10க்கும் குறைவானோருக்கு டெங்கி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தீவின் ஆகப்பெரிய சிவப்பு எச்சரிக்கை பகுதி டனர்ன் சாலை அருகே உள்ளது. ஹுவா குவான் அவென்யூவும் ரைஃபல் ரேஞ்ச் சாலையும் அப்பகுதியைச் சுற்றியுள்ளன.

இதர சிவப்பு எச்சரிக்கை பகுதிகள் ஜாலான் ஜூரோங் கச்சில், ஹாலந்து சாலை, உட்லண்ட்ஸ் டிரைவ் 17 அருகே உள்ளன.