யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியல் பரிந்துரையில் தைப்பூசத் திருவிழா
யுனெஸ்கோவின் தொட்டுணர முடியாத கலாசார மரபுடை மைப் பட்டியலில் இடம்பெற பரிந்துரைக்கப்படும் சிங்கப்பூர் பட்டியலில் வருடாந்திர தைப்பூசத் திருவிழா, சிங்கே அணி வகுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மனிதகுலத்தின் தொட்டுணர முடியாத கலாசார மரபு டைமைக்கான யுனெஸ்கோவின் பிரதிநிதிப் பட்டியலில் இடம்பெறக்கூடிய நாட்டின் இரண்டாவது பரிந்துரையை முடிவு செய்வதற்கு முன், தேசிய மரபுடைமைக் கழகம் வரும் மாதங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் என்று கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் லோ யென் லிங் நேற்று கூறினார்.
மற்ற எட்டு கூறுகளாக, பிறப்பு மரபுகள், மலாய் கலை வடிவமான டிக்கிர் பாராட், சீன கெத்தாய் நிகழ்ச்சி, மலாய் பலகாரம் தயாரித்தல் மற்றும் பகிர்தல், ஆர்க்கிட் பயிரிடுதல், பெரனாக்கான் மணி வேலைப்பாடு மற்றும் நூல் கைவினை, பாரம்பரிய மருத்துவம், சீனப் புத்தாண்டைக் கொண்டாடு வதற்கான நடைமுறைகள், யுஷெங், அதனுடன் தொடர்பு உடைய உணவு பாரம்பரியம் மற்றும் சமூக நடைமுறைகள் ஆகியவை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கனரக வாகனங்களை நிறுத்த தீவு முழுவதும் போதுமான இடங்கள்
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி சுமார் 32,400 கனரக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 42,100 கனரக வாகனங்கள் நிறுத்துமிடங்கள் உள்ளன. அப்படி என்றால் நாடு முழுவதும் அனைத்து கனரக வாகனங்களையும் நிறுத்துவதற்கு போதுமான இடங்கள் உள்ளன என்று தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் நேற்று தெரிவித்தார்.
எண்ணெய் விலை ஒருங்கிணைப்பு: நிறுவனங்கள் மீது நடவடிக்கை
உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் எண்ணெய் நிறுவனங்களிடையே போட்டித்தன்மைக்கு எதிரான விலை ஒருங்கிணைப்பு இருக்கக்கூடாது என்பதை சிங்கப்பூர் வணிகப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் கண்காணித்து உறுதிப்படுத்துகிறது என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார். அவ்வாறு செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
மலாய்/முஸ்லிம் மாணவர்களுக்கு
புதிய கல்வி உபகாரச் சம்பளம்
அதிகமான மலாய்-முஸ்லிம் மாணவர்களை நிதித்துறை வேலையில் சேர ஊக்குவிப்பதற்காக சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான ஜிஐசிக்கும் சுய உதவி அமைப்பான மெண்டாக்கிக்கும் இடையே ஒரு புதிய கல்வி உபகாரச் சம்பளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உபகாரச் சம்பளத்தின் மூலம் கிடைக்கும் தொகையை, கல்விக் கட்டணம், வாழ் வாதார ஊக்கத் தொகை, வெளிநாட்டு பரிமாற்றங்கள், நிதி தொடர்பான கருத்தரங்குகள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப் படலாம் என்று தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று தெரிவித்தார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தகுதியான மாணவர்களும் மருத்துவம், பல்மருத்துவத் துறையின் மாணவர்களும் இந்த உபகாரச் சம்பளத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றார் திரு ஸாக்கி.
முயிஸ் முதுகலை படிப்பை மேற்கொள்ள ஐந்து மாடி புதிய வளாகம்
சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) முதுகலை படிப்புக்கான புதிய ஐந்து மாடி வளாகத்தை அமைக்க உள்ளது. இங்குள்ள சமய ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்துவதற்காக இந்தப் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. பென்கூலன் ஸ்திரீட்டில் அமையவிருக்கும் இந்த வளாகம் இந்த ஆண்டு இறுதியில், சமகால சமூகங்களில் இஸ்லாத் தின் பங்களிப்பு என்ற துறையில் முதுகலைப் பட்டதாரி மாணவர்களுக்கு அதன் கதவுகளைத் திறக்கும்.
"சிங்கப்பூரின் இளம் சமய ஆசிரியர்களின் வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் இந்த வளாகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது ஒரே நேரத்தில் சுமார் 300 மாணவர்கள், ஊழியர்களுக்கான இணை பணியிடங்கள் போன்ற வசதி களைக் கொண்டிருக்கும்," என்று முஸ்லிம் விவகாரங் களுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று கூறினார்.
சிங்கப்பூரில் 'பிரிங் ஸ்போர்ட் பேக்' திட்டத்துக்கு $20 மில்லியன் ஒதுக்கீடு
2020ஆம் ஆண்டில் கொவிட்-19 தொற்றுநோய் தாக்கத் திற்குப் பிறகு, 'ஆரஞ்ச் ரூம்' எனும் விளையாட்டு மற்றும் நல்வாழ்வு நிகழ்வுகள் நிறுவனம் அந்த ஆண்டு ஆசியாவின் ஆறு நாடுகளில் நடைபெறவிருந்த 32 நிகழ்வுகளில் 31ஐ ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வருவாய் மற்றும் பணப்புழக்கத்தைத் தவிர, நிறுவனத் தின் ஆற்றல்களும் பாதிக்கப்பட்டன. அதன் நிர்வாக இயக்குநர் திரு ஆல்வின் டிங், தனது குழுவின் 50 பேர் எண்ணிக்கையை சுமார் 70% குறைக்க வேண்டியிருந்தது என்றார்.
'ஆரஞ்ச் ரூம்' போன்ற நிறுவனங்கள் தங்கள் நிலைப் பாட்டை மீட்டெடுக்கவும், விளையாட்டுப் பங்கேற்பை மீண்டும் புத்துயிர் பெற உதவும் வகையிலும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், $20 மில்லியன் மதிப்பிலான திட்டத்தை நேற்று அறிவித்தார். அது விளையாட்டின் தேவையை அதிகரிக்க உதவும் என்றார். 'பிரிங் ஸ்போர்ட் பேக்' என அழைக்கப்படும் இந்தத் திட்டம், சமூக ஓட்டங்கள், திட்டங்களை மேம்படுத்துதல், விளையாட்டு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பெரிய அளவிலான மக்கள் பங்கேற்பு நிகழ்வுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதை மேலும் எளிதாக்கும்.
பெரிய அளவிலான மக்கள் பங்கேற்பு நிகழ்வுகளை மீண்டும் தொடங்குவதற்கு ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு முயல்கிறது. அத்தகைய நிகழ்வுகள், விழாக்களுக்கு நிதி அளிப்பதற்கான ஒரு மானியத்துக்கு விண்ணப்பிக்க பல்வேறு அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றார் திரு டோங்.

