மணமுறிவு பெற்ற 50 வயது ஜெஸ் நான்கு குழந்தைகளின் தாயார். அவருக்கு உதவியும் வழிகாட்டுதலும் தேவைப்படும்போது அவருடைய தோழி ஐரீன் சோவை நாடுகிறார். அந்த கிடங்கு உதவியாளர் மாதம் சுமார் $2,000 சம்பாதிக்கிறார். அவரது குழந்தைகள் 17 மற்றும் 27 வயதுக்கு இடைப்பட்டவர்கள். அவர்களில் இருவர் வாடிக்கையாளர் சேவைத் துறையில் பணிபுரிகின்றனர். மற்ற இருவரும் இன்னும் படித்துக்கொண்டிருக்கின்றனர்.
காம்லிங்க் எனும் சமூக இணைப்பு முன்னோடித் திட்டத்தின்கீழ் தோழமை ஆதரவு முயற்சியின் ஒரு பகுதியாக, 43 வயதான திருமதி சோ, கடந்த ஆண்டு ஜெஸ்ஸின் குடும்பத்துடன் இணைக்கப்பட்டார். அதிக மானியத்துடன் கூடிய வீவக வாடகை குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளைக் கொண்ட குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு, காம்லிங்க் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குகிறது.
தொண்டூழியர்களாக உள்ள தோழர்கள் இந்தக் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்குவதோடு சமூக சேவை அலுவலக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று தெரிவித்தார்.

