சிங்கப்பூர் அரசாங்கம் வரும் நிதியாண்டில் செலவிட உள்ள $109 பில்லியன் திட்டங்களை நாடாளுமன்றம் அங்கீகரித்தது.
புதிய வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் 66 உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். வரவுசெலவுத் திட்டத்தை மன்றம் 73 மணி நேரத்திற்கும் அதிகமாக விவாதித்தது.
இரண்டு வார காலமாக நடந்த அந்த விவாத முடிவில் நேற்று பேசிய நாடாளுமன்றத் தலைவர் குமாரி இந்திராணி ராஜா, கடந்த இரண்டு வாரங்களில் கட்சி பாராமல் உறுப்பினர்களை கொவிட்-19 தொற்று பாதித்தாலும் விவாதிப்புகள் காரசாரமாக இருந்ததாகக் கூறினார்.
விவாதம் தொடங்கியபோது உக்ரேன் போர் தொடங்கியதையும் அவர் சுட்டினார்.
"ஒரு நாட்டின் சுதந்திரம், சுய தீர்மான உரிமை, எல்லை இறையாண்மை ஆகியவை விலைமதிப்பில்லாதவை.
"அவற்றைக் கிள்ளுக்கீரையாகக் கருதக்கூடாது என்பதையே உக்ரேன் போர் ஒவ்வொருவருக்கும் நினைவூட்டுகிறது," என்று அவர் கூறினார். புதிய வரவுசெலவுத் திட்டம், மன்றம் அங்கீகரித்துள்ள அதிக உருமாற்றத்துக்கான திட்டங்களில் ஒன்று என குமாரி இந்திராணி குறிப்பிட்டார்.
நியாயமான, பசுமைமிக்க, எல்லாருக்குமான, மொத்தத்தில் மேலும் முன்னேற்ற கரமான சிங்கப்பூரை சாதிக்கக் கூடியது என்று அத்திட்டத்தை அவர் வர்ணித்தார்.
வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்று இருந்த ஜிஎஸ்டி வரி உயர்வு, வெளிநாட்டு ஊழியர் தொடர்பான நடவடிக்கைகள் ஆகியவை அதிகம் விவாதிக்கப்பட்ட அம்சங்களில் சிலவாகும்.
மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இந்த ஆண்டு விவாதத்தைப் போல் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் பங்கெடுத்ததில்லை என்று குமாரி இந்திராணி குறிப்பிட்டார்.
மன்ற விவாதத்தில் காரசாரமான விவாதம் நடப்பது மதிப்புமிக்க ஒன்று என்ற அவர், அதேவேளையில் உறுப்பினர்கள் மன்றத்திலும் வெளியிலும் தங்கள் செயல்களில் நன்னடத்தையை நிலைநாட்டி வரவேண்டியது முக்கியமானது என்றார்.
இதனிடையே, விவாதத்தை முடித்துவைத்துப் பேசிய நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின், "அரசாங்கத்தின் தகவல் தொடர்புகள் சிக்கலானவையாக இருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கக்கூடும். ஆனால் நீங்கள் பலன் தரும் செயல்களைச் செய்யும்போது விவரங்கள் என்பது ஒரு பொருட்டாகவே இருக்கும்," என்று கூறினார்.
சிங்கப்பூர் சேமிப்பின் முக்கியம் பற்றி கருத்து கூறிய அவர், வரும் ஆண்டுகளில் தேவை ஏற்படும்போது நிதி அமைச்சு தலையிட்டு அவசியமானவற்றைச் செய்யும் என்பதில் தமக்கு ஐயமில்லை என்றார். ஆனால் சேமிப்பு இருந்தால் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும் என்றாரவர்.

