சிங்கப்பூர் தன் மக்களுக்குக் குடியிருப்பு வீடுகளை உருவாக்கித் தருவதில் உலக அளவில் சாதனை படைத்துள்ள நாடு. உலகில் ஆக அதிக மக்கள் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள் என்ற ஒரு நிலையை எட்டி இருக்கும் ஒரு சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் இருக்கின்றன. சிங்கப்பூர்வாசிகளில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் அந்த வீடுகளில் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் பொது வீடமைப்புத் திட்டம் எல்லாருக்கும் சொந்த வீடு என்ற அடிப்படை இலக்கை நிறைவேற்றுவதோடு நின்றுவிடாமல், இன நல்லிணக்கம், ஐக்கியம் ஆகிய மிக முக்கியமான நோக்கங்களும் நிறைவேற பேருதவி புரிகிறது.
சிங்கப்பூர் நிலப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் சிறிய நாடு என்ற போதிலும் பொது குடியிருப்புப் பேட்டைகளில் எல்லா இன, சமய மக்களும் அவரவர் வழமைகளைப் பின்பற்றி மனநிறைவுடன் வாழவும் அதே வேளையில் அனைத்து மக்களும் நல்லுறவைப் பேணி வளர்க்கவும் கூடுமானவரை பல்வேறு வசதி களும் வாய்ப்புகளும் உள்ளன.
பல இன நாடான சிங்கப்பூரில் வசிக்கும் மக்களில் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அளவுக்கு அதிகமாக வாழ்வதால் வேண்டாத பிரச்சினைகள் உருவாகலாம்; அத்தகைய சூழல் சிங்கப்பூரின் ஐக்கியத்துக்கு, நல்லிணக்கத்திற்கு ஆதரவாக இல்லாமல் போகலாம் என்பதால் அரசாங்கம் 1989 ஆம் ஆண்டில் ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்தியது.
'இன ஒருங்கிணைப்புக் கொள்கை' என்ற அந்தக் கொள்கை ஒவ்வொரு வீவக புளோக்கிலும் அக்கம் பக்கத்திலும் சொந்த வீட்டைப் பெற மக்களுக்கு இன ரீதியிலான வரம்புகளை விதிக்கிறது.
அதாவது ஒரு புளோக்கில் எந்த இன மக்களும் அந்த வரம்பைத் தாண்டி சொந்த வீடு கொண்டிருக்க இயலாது. வீடு வாங்கப்படும் போதும் பிறகு வீடு விற்கப்படும் போதும் இந்த வரம்பை அடிப்படையாகக்கொள்ள வேண்டி இருக்கிறது.
இன்றைய தேதியில் பார்க்கையில் மூன்று வீவக புளோக்குகளில் ஒரு புளோக்கிலும் 16% வீவக அக்கம்பக்கக் குடியிருப்புப் போட்டைகளிலும் இந்தக் கொள்கையில் ஒன்று அல்லது அதிக வரம்புகள் எட்டப்பட்ட நிலை இருக்கிறது.
ஆகையால், இத்தகைய பகுதிகளில் வாழ்பவர்களில் சிலர் தங்கள் வீட்டை விற்க சிரமப்படுகிறார்கள். வீட்டை குறிப்பிட்ட இனத்தவரிடம்தான் விற்க வேண்டிய நிலை அவர்களுக்கு இருப்பதால் அத்தகை யோர் கிடைக்காமல், அதனால் தங்கள் வீட்டை விற்க முடியாமல் அவர்கள் தவிக்கிறார்கள்.
இத்தகைய சிரமத்தை எதிர்நோக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சு புதிய திட்டத்தை அறிவித்தது.
அதாவது, இன ஒருங்கிணைப்புக் கொள்கை காரணமாக வீட்டை விற்க முடியாமல் திணறுவோரின் வீட்டை, வீடமைப்பு வளர்ச்சிக் கழகமே வாங்கிக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், அத்தகைய வீட்டு உரிமையாளர்களுக்கு உதவுவதோடு பல இன வீடமைப்பு கொள்கை என்ற மூலாதார கோட்பாட்டை மேலும் வலியுறுத்துவதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அத்தகைய உரிமையாளர்களின் வீட்டை அரசாங்கமே திரும்ப வாங்கிக்கொள்ளும் என்பதால் அரசுக்குச் செலவு ஏற்படத்தான் செய்யும்.
இருந்தாலும்கூட இது வரவேற்கத்தக்க ஒரு திட்டமாகக் கருதப்படுகிறது. இன ஒருங்கிணைப்புக் கொள்கையின் அடிப்படை முக்கியத்துவத்தைத் தூக்கிப்பிடிக்கும் ஒன்றாக இத்திட்டம் இருக்கும் என்பதே இதற்கான காரணம்.
அன்றாட வாழ்வில் குடியிருப்புப் பேட்டைகளில், புளோக்குகளில் பல இனத்தவரும் கலந்துறவாடி நல்லிணக்கத்தைப் பேணும் சமூக இலக்கை நிறைவேற்றும் ஒரு மையமாக பொது குடியிருப்பு பேட்டைகள் திகழவும் இந்தப் புதிய திட்டம் பெரிதும் சாதகமாக இருக்கும். நாடாளுமன்றத்தில் அரசாங்கம் இதர சில திட்டங்களையும் அறிவித்து உள்ளது.
அரசாங்க வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினர் தங்களது இரண்டாவது வீவக வீட்டை சொந்த மாக வாங்கிக்கொள்ள அதிக மானியம் வழங்குவது; ஒற்றையராக வாழ்பவர்கள் வாடகை வீட்டில் வசிக்க உதவுவது ஆகியவை இதர திட்டங்கள்.
அரசாங்க வாடகை வீடுகளில் குடி இருக்கும் குடும்பத்தினர் இரண்டாவது வீவக வீட்டை சொந்தமாக வாங்கிக்கொள்ள இனி $50,000 மானியம் பெறலாம். இந்த மானியம் இப்போது $35,000 ஆக இருக்கிறது.
இந்த முடிவு, குறைந்த வருமான குடும்பங்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டிய தேவையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
பொது குடியிருப்புப் பேட்டைகளில் பல்வேறு வகைப்பட்ட வருமானம் உள்ளவர்கள் சேர்ந்து வசிக்கிறார்கள். அவர்களில் பலரும் பொருளியல் ரீதியில் சிரமங்களை எதிர்நோக்கக்கூடும். இருந்தாலும்கூட அடிப்படை தேவையான வீட்டை அத்தகைய குடும்பத்தினரும் பெற்றிருக்க வேண்டும்.
இந்த இலக்குகளை மனதில்கொண்டு மானியம் அதிகரிக்கும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.
அதிக மானியம் காரணமாக சிங்கப்பூர்வாசிகளில் மேலும் பல குடும்பங்கள் சொந்தமாக வீடுகளைப் பெற்றிருக்கும் நிலை ஏற்படும் என்பது திண்ணம். அனைவரையும் உள்ளடக்கி எல்லாருக்குமான சமூகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தையொட்டி ஒற்றையருக்கான முன்னோடி வீட்டுத் திட்டம் நடப்புக்கு வந்துள்ளது.
வாடகை வீட்டில் குடியேற விரும்பும் சிங்கப்பூர்வாசி ஒருவர், அந்த வீட்டில் தன்னுடன் சேர்ந்து வாழ வேறு ஒருவரைக் காண வேண்டியது கட்டாயம்.
இது ஒற்றையர்களுக்குச் சுமை என்று தெரி விக்கப்பட்டது. இந்தச் சுமையைப் போக்கும் வகையில் இப்போது முன்னோடித் திட்டம் நடப்புக்கு வந்துள்ளது.
பிடோக், புவாங்காக் கிரசெண்டில் இருக்கும் இரண்டு அரசாங்க வாடகை புளோக்குகளில் அந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. ஏறக்குறைய 90 ஒற்றையர்கள் அந்த முன்னோடித் திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்கள் வீட்டை பெறுவதற்கு வேறு ஒருவரை தேடி கண்டுபிடிக்க வேண்டிய தேவை இல்லை. இதனால் இத்தகைய ஒற்றையருக்கும் பெரும் சுமை குறைந்து அவர்கள் வாழ்க்கையை வசதியாக தொடர வழி ஏற்படும்.
அரசு அறிவித்துள்ள புதிய திட்டங்கள் பொது வீடமைப்புத் திட்டத்தின் அடிப்படை இலக்குகள் நிறைவேற உறுதுணையாக இருக்கும்.

