பேருந்து, தளவாடப் போக்குவரத்து நிறுவனங்கள், டாக்சி, வாடகை கார் ஓட்டுநர்கள் தவிப்பு
எண்ணெய் விலை உயர்வு காரணமாக பேருந்து நிறுவனங்கள், தளவாடப் போக்குவரத்து நிறுவனங்கள், டாக்சி ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அத்தகைய நிறுவனங்களுடன் தான் பேசியதாகவும் செய்வதறியாது தாங்கள் தவிப்பதாக அந்த நிறுவனங்கள் கூறியதாகவும் சண்டே டைம்ஸ் தெரிவித்தது.
அந்த நிறுவனங்களுக்கு ஆகும் செலவில் ஏறத்தாழ 30 விழுக்காடு போக்குவரத்து தொடர்பானதாகும்.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்து இருப்பதால் எரிபொருள் விலை கூடிவிட்டது. இதனால் முதலில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இந்த நிறுவனங்கள் இருக்கின்றன.
சில நிறுவனங்கள் செலவைக் குறைக்கத் தொடங்கிவிட்டன. சம்பளக் குறைப்பு அல்லது சில நடைமுறைகளை அறவே நிறுத்திவிடுவது போன்ற முடிவுகளை இவை எடுத்து உள்ளன. கூடுதல் செலவில் எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய தேவை இருக்கும் என்பது பற்றி இதர நிறுவனங்கள் ஆராய்கின்றன.
'கோ பஸ் டிரான்ஸ்போர்ட் சர்விசஸ்' என்ற நிறுவனத்தின் உரிமையாளரான எட்மண்ட் கோ, "நாங்கள் பாதிக்கப்பட்டுவிட்டோம்," என்றார். கட்டுமான ஊழியர்களை ஏற்றிச் செல்வது உள்ளிட்ட வாடகைச் சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.
கட்டுப்படியாகாததால் பேருந்துச் சேவைகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது என்று எட்மண்ட் கோ கூறினார்.
இந்த நிறுவனத்திடம் 11 பேருந்துகள் இருக்கின்றன. "எரிபொருள் செலவு இரண்டு மடங்காகி, மாதம் ஒன்றுக்கு $1,500 ஆகிவிட்டது. இதை வைத்து கூடுதலாக ஒரு வாகன ஓட்டுநருக்கு வேலை கொடுத்துவிடலாம்," என்றாரவர்.
செலவு அதிகரித்து இருப்பது பற்றி கருத்து கூறிய சிங்கப்பூர் பள்ளிக்கூடம் மற்றும் தனியார் வாடகை பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவரும் 'தோங் டார் டிரான்ஸ்போர்ட் சர்விசஸ்' என்ற நிறுவனத்தின் முதலாளியுமான திரு பிலிப் பே, சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பது பற்றி தன்நிறுவனமும் இதர பேருந்து நிறுவனங்களும் ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.
கொஞ்சம் கூடுதலாக கட்டணத்தைச் செலுத்துமாறு பேருந்து நிறுவனங்கள் பயணிகளைக் கேட்டுக்கொள்ள வேண்டி இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு விமானம் மூலம் வரும் சரக்குகளைக் கப்பல்கள் மூலம் வேறு இடங்களுக்கு அல்லது இங்குள்ள கிடங்குகளுக்கு அனுப்பும் சேவையை செய்யும் 'நேஷனல் ஃபார்வடர்' என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அமிர்தலிங்கம் துரைராஜூ, தளவாடப் போக்கு வரத்து தொழில்துறை இரண்டு பக்கமும் நெருக்கப்படுவதாகக் கூறினார்.
"ஒரு பக்கம் விமான நிறுவனங்கள் கட்டணத்தை ஏற்றுகின்றன. இதில் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்துவிடலாம். ஆனால் உள்ளூர் போக்கு வரத்துச் செலவு போன்ற செலவுகளைப் பொறுத்தவரை எதையும் செய்ய முடியாது," என்று அவர் தெரிவித்தார்.
சரக்குகளை அனுப்பும் சேவை நிறுவனங்கள் ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். கிடங்குக் கட்டணங்களும் கூடுகின்றன.
"எரிபொருள் விலை உயர்வினால் எங்களுக்கு லாபம் இல்லை. இதில் ஒளிவுமறைவு எதுவும் இல்லை. அதிக செலவை மற்றவர்கள் ஏற்குமாறு செய்வது பற்றியும் இப்போதைக்கு எதுவும் தெரியவில்லை. இருந்தாலும்கூட எல்லாவற்றையுமே மீண்டும் திட்டமிட வேண்டிய சூழ்நிலை இருக்கும்," என்று திரு அமிர்தலிங்கம் விளக்கினார்.
நிறுவனத்தின் கொள்கைகள் காரணமாக பேருந்து ஓட்டுநர்கள் இந்த ஆண்டு தொடக்கம் முதல் பெட்ரோல், டீசல் விலை ெசலவில் 40 விழுக்காடு வரை தாங்களே ஏற்றுக்கொள்கிறார்கள் என்று 'ஆர்எஸ் டிரான்ஸ்போர்ட்' என்ற பள்ளிக்கூட பேருந்து நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
"பள்ளிக்கூட பேருந்துச் சேவைகளைக் குறைக்க முடியாது. ஆகையால் ஓட்டுநர்கள்தான் இப்போது கவலையுடன் இருக்கிறார்கள். அரசாங்கம் சில உதவிகளைச் செய்ய முடியும்," என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இங்கு சேவையாற்றும் 80,000 டாக்சி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் அதிக எரிபொருள் செலவைத் தாங்களே ஏற்கிறார்கள். வேலையை விட்டுவிடலாம் என்றுகூட சிலர் யோசிக்கிறார்கள்.
சூழ்நிலையை அரசாங்கம் கண்காணித்து வருவதாகவும் தேவையெனில் டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு மேலும் உதவி வழங்கப்படும் என்றும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இம்மாதம் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசியபோது தெரிவித்தார்.

