சிங்கப்பூரில் மூன்று வயது வரை உள்ள பிள்ளையைக் கொண்டுள்ள ஒவ்வொரு தம்பதிக்கும் தங்கள் குழந்தையின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் மரக்கன்று ஒன்றை நடுவதற்கு வாய்ப்பளிக்கும் 'குடும்ப மரங்கள்' என்ற ஒரு செயல்திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
அந்தத் திட்ட தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நேற்று 10 இளம் குடும்பங்கள் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டன. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஆகியோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
தேசிய பூங்காக் கழகம் மரக்கன்றை ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுக்கும். அதை நட்டு குடும்பத்தினர் அதற்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
இந்த ஆண்டை, சிங்கப்பூர் (எஸ்ஜி) குடும்பக் கொண்டாட்ட ஆண்டாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வகைப்படுத்தி இருக்கிறது. ஆண்டுக் கொண்டாட்டங்களின் தொடக்க நிகழ்ச்சியாக குடும்ப மரங்கள் செயல்திட்டம் இடம்பெறுகிறது.
ஓராண்டு இடம்பெறும் இந்தப் புதிய குடும்பக் கொண்டாட்ட இயக்கம் குடும்ப அடிப்படையிலான பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆண்டு முழுவதும் ஏற்பாடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறவையும் ஆதரவையும் நன்னெறிகளையும் பலப்படுத்தும் நோக்கத்துடன் கூடிய செயல்திட்டங்களும் இடம்பெறும்.
குடும்ப மரங்கள் செயல்திட்டத்தை 'ஃபேமிலிஸ் ஃபார் லைஃப்' என்ற மன்றமும் தேசிய பூங்காக் கழகமும் மேற்பார்வையிடுகின்றன.
அந்தச் செயல்திட்டத்தின் கீழ் மாதாமாதம் மரம் நடும் நிகழ்ச்சி நடக்கும். இந்த ஆண்டுக்கு அப்பாலும் வரும் ஆண்டுகளிலும் இந்த நிகழ்ச்சி தொடரும்.
இந்தச் செயல்திட்டத்தில் கலந்துகொள்ள குடும்பங்கள் https://www.nparks.gov.sg/treessg/one-million-trees-movement/familytrees என்ற இணையத்தளத்தில் பதிந்துகொள்ளலாம்.
பதியும் போது கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவராவது சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
குழந்தைக்கு வயது 3க்குக் குறைவாக இருக்க வேண்டும். மரக்கன்றை நட்ட பிறகு அதன் நினைவாக மின்னணுச் சான்றிதழ் வழங்கப்படும்.

