உக்ரேன் மீது படை எடுத்ததற்காக ரஷ்யாவுக்கு எதிராக மேற்கு நாடுகளுடன் சேர்ந்து தடை விதிக்க சிங்கப்பூரும் முடிவு செய்து இருப்பதை சிங்கப்பூருக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடேேஷவ் குறைகூறினார்.
சிங்கப்பூரின் முடிவு தவறா னது; அது இருதரப்பு உறவு மேம்பாட்டுக்கு எதிரானது; வட்டார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கும் அது எதிரானது என்று தாங்கள் நம்புவதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாளுக்கு அளித்த ஒரு பேட்டி யில் திரு குடேேஷவ் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு எதிராக தடை விதித்துள்ள ஒரே ஒரு தென் கிழக்கு ஆசிய நாடு சிங்கப்பூர்தான் என்பதைச் சுட்டிய அவர், இந்த வட்டாரப் பிரச்சினைகளில் ஒருமித்த கவனத்தைச் செலுத்துவது விவேகமிக்கதாக இருந்திருக்கும் என்றார்.
ஆசியாவில் இருந்து தொலை வில் இருக்கும் ஒரு பகுதியின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைவிட இந்த வட்டாரத்திற்கான அடிப்படை முக்கியத்துவமிக்க விவகாரங்களில் கவனம் செலுத்துவதே தங்கள் விருப்பமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் இறையாண்மையை, அரசியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் கோட்பாடுகளுக்குத் தோள் கொடுப்பது தவிர்க்க இயலாத ஒன்று என்று சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உக்ரேனில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய பொருள்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் விதித்துள்ளது. குறிப்பிட்ட சில ரஷ்ய வங்கிகளுடன் தொழில் உறவுகளை வைத்துக்கொள்ளக் கூடாது என்று வங்கிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
"மாஸ்கோவுக்கு எதிராக தடை விதித்துள்ள நாடுகள் அடங்கி உள்ள பட்டியலில் சிங்கப்பூரும் சேர்ந்துள்ளது. இதனை அடுத்து ரஷ்யாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடைப்பட்ட 'அரசியல் உறவு' சிறப்பு கண்காணிப்பின் கீழ் வைக்கப்படும்.
"மிகக் கடுமையான கண்காணிப்பின்கீழ் மட்டுமே பொருளியல் தொடர்புகள் அனுமதிக்கப்படும்," என்று தூதர் கூறினார்.
உக்ரேன் மீது ரஷ்யா படை எடுத்ததைக் கண்டித்து ஐநா பொதுப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை திரு குடேேஷவ் நிராகரித்துவிட்டார்.

