தங்களது நண்பர்களாகப் பாசாங்கு செய்து போசடி செய் தோரிடம் குறைந்தது 280 பேர் பணத்தை இழந்து உள்ளனர். அவர்கள் இழந்த மொத்த தொகை $1.2 மில்லியனுக்கு மேல் இருக்கும் என்று காவல்துறை நேற்று முன்தினம் தெரிவித்தது.
ஏமாற்றுப் பேர்வழிகள் தொலைபேசி வழி அழைத்து தாம் அழைக்கும் நபரின் நண்பர் என்றும் தங்களுக்குப் பண உதவி தேவைப்படுகிறது என்றும் கூறி பணத்தை ஏமாற்றிப் பெற்றுக்கொள்வார்கள்.
இந்த முறையில் மோசடி செய்யும் போக்கு அண்மைய காலத்தில் மீண்டும் அதிகரித்து வரு கிறது என்றும் காவல்துறை சுட்டியது.
பொதுவாக '+' எனும் குறியுடன் தொடங்கும் ஓர் எண்ணில் அந்த ஏமாற்றுப்பேர்வழி அழைப்பார். தொலைபேசியில் ஒரு நபரை அழைக்கும் அந்த ஏமாற்றுப் பேர்வழி அந்த நபருக்கு சிந்திக்க நேரம் கொடுக்காமல் "நான் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்?" அல்லது "என்னை நினைவு இல்லையா?" என்றெல்லாம் கேள்விகள் கேட்டு திசை திருப்புவார்.
அந்த நபர் இது உண்மையிலேயே தங்களது நண்பர் என்று ஒரு நண்பரின் பெயரைச் சொல்வார். அந்த ஏமாற்றுப் பேர்வழியும் அந்த நண்பர்தான் தாம் என்று கூறி தமது எண்ணை குறித்துக்கொள்ளும்படியும் சொல்வார்.
சில நாள்களுக்குப் பிறகு அந்த ஏமாற்றுப்பேர்வழி மீண்டும் அந்த நபரை அழைத்து தமக்கு நிதி நெருக்கடி உள்ளது என்று கூறி பணத்தைக் கடனாகக் கேட்பார். அந்த நபரும் நம்பி பணத்தை கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துவிடுவார். சில நாள்களுக்குப் பிறகுதான் தாம் ஏமாந்துவிட்டதை அந்த நபர் புரிந்துகொள்வார்.
'+' குறியுடன் தொடங்கும் எண்ணிலிருந்து வரும் அழைப்புகளைக் கண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறையினர் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.
இதுபோன்ற ஏமாற்றுப் பேர்வழிகளுடன் தொடர்பு இருந்தால் 1800-255-0000 எனும் காவல்துறை எண்ணுடன் அல்லது காவல்துறையின் இணையப்பக்கம் மூலம் தங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் காவல்துறை பொது மக்களைக் கேட்டுக்கொள்கிறது.