ஆ. விஷ்ணு வர்தினி
எதிர்பாராத திருப்பங்களைத் தந்த கொவிட்-19 சூழலில் தொழில் துறையில் அடியெடுத்து வைக்கும் இளையர்களுக்குக் கைகொடுக்க முற்பட்டது 'யூத் கனெக்ஷன்ஸ்' பயிலரங்கு.
மக்கள் கழக நற்பணிப் பேரவை இளையர் குழு ஏற்பாடு செய்த இந்தப் பயிலரங்கு நேற்று மெய் நிகர் வழி இடம்பெற்றது. மூன்று மணி நேரம் நீடித்த பயிலரங்கு இளையரின் சந்தேகங்களைப் போக்க முனைந்தது.
நிதி நிர்வாகம், மனநலப் பராமரிப்பு, வாழ்க்கைக் கல்வி என மூன்று கூறுகளாக இப்பயிலரங்கு நடத்தப்பட்டது. வெவ்வேறு துறைகளில் பணியாற்றுவோர் தங்களது அனுபவங்களை பயிலரங்கில் முன்வைத்தனர்.
"எந்த முன் அனுபவமும் இன்றி ஏர் ஏஷியாவில் இணைந்து அந்தநிறுவனத்தைத் தொடங்கி, விரிவுபடுத்தினேன். அதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளுக்கு மாறி பணியாற்றினேன். ஒவ்வொரு படியிலும் எனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன்," என்றார் உத்திபூர்வ ஆலோசகர் திரு ப்ரிவின் ராஜ்.
இளையர்கள் தங்கள் அடையா ளத்தைத் தெரிந்துகொண்டு அது பற்றி நுட்பமாக சிந்திக்க வேண்டும் என்று கூறினார் திரு ப்ரிவின். அதே சமயம், நமது இயல்பைச் சந்தேகித்து யாருக்காகவும் நம்மை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
சுவாரசியமான ஓவிய அங்கத்திலும் கலந்துகொண்டனர் இளையர்கள். மனநல ஆலோசகரும் கலையியல் நிபுணருமான திருமதி நளினி இவ்வங்கத்தை வழிநடத்தி னார். மனநலம் குறித்து உரையாற்றிய திருமதி நளினி, "மனநல ஆரோக்கியம் என்பது எதிர்மறை விஷயங்களைத் தவிர்ப்பது அல்ல. மாறாக, நல்ல தருணங்களுக்கு மேலும் முக்கியத்துவம் அளிப்பதே ஆகும். கலையியல் என்பது முக்கியமானவற்றின்மீது நமது கவனத்தை ஒருங்கிணைக்கச் செய்கின்றது," என்றார்.
வாழ்வின் முக்கியக் கட்டத்தை எதிர்நோக்கியுள்ள இளையர்களுக்கு வாழ்வியல் முடிவுகள், பொறுப்புகள் குறித்து இந்நிகழ்வு விழிப்புணர்வூட்டியது.
"இளையர்களுக்குப் பல தனிப்பட்ட சவால்கள் இருக்கலாம். எங்கு, யாரிடம் அவற்றைப் பற்றி ஆலோசனை கேட்பது என்று அவர்கள் குழம்பியிருக்கலாம். சமூகத்தில் இளையர்களுக்கு வழிகாட்டுவதே இப்பயிலரங்கின் நோக்கம்," என்றார் 'யூத் கனெக்ஷன்ஸ்' ஏற்பாட்டுக் குழுத் தலைவர் நீரஜ் லக்ஷ்மணன்.
"மேலும், இளையர்கள் நிபுணர்களிடம் மனம்விட்டுப் பேசி தங்களது வாழ்க்கை லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள இத்தளம் வாய்ப்பளித்தது. தனிப்பட்ட முறையில் ஆலோசனைகளையும் இளையர்கள் பெறமுடிந்தது. பிற இளையர்களிடம் பேசி தெளிவு பெறவும் இந்தநிகழ்வு உதவியது," என்றார் திரு நீரஜ்.
இப்பயிலரங்கில் 120 இளையர்கள் பங்கேற்றனர்.

