மூன்று ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு, திரு ஜேசன் லியோங்கிற்கு ஒவ்வொரு கையிலும் நான்கு விரல்கள் மட்டுமே இருந்தன. மேலும் இரண்டு கால்களிலும் முழங்காலுக்குக் கீழே துண்டிக்கப்பட்டிருந்தன.
44 வயதான அவர் கடும் ரத்தவோட்டத் தடை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால், அவரது உடல் திசுக்கள் உயிரிழந்துவிட்டன. இது பொதுவாக கால்விரல்கள், கைவிரல்கள் உட்பட கைகளையும் கால்களையும் பாதிக்கிறது.
ஏப்ரல் 2019ல் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்த தீவிர விளையாட்டுப் பிரியரும் முன்னாள் உடற்கல்வி ஆசிரியருமான திரு லியோங், அதிலிருந்து மீண்டு வரு வதில் உறுதியாக இருந்தார்.
உடற்குறையுள்ளோர் விளையாட்டுகளை ரசிக்க உதவுவதற்காக ஸ்போர்ட் சிங்கப்பூர் குழுவில் தற்போது பணியாற்றும் திரு லியோங், 40 கிலோ எடையுடன் மெதுவோட்டத்திலும் அமர்ந்து எழும் செயலிலும் ஈடுபட முடியும். உடலில் செயற்கை கருவிகள் பொருத்தப்பட்ட அவர், வாரத்தில் ஐந்து நாட்கள் அதிக தீவிரமான பயிற்சிகளில் பங்கேற்கிறார்.
கடந்த வியாழக்கிழமையன்று சிங்கப்பூர் உடற்குறையுள்ளோருக்கான பயிற்சிக் கழகத்தை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் உடற்குறையுள்ளோர் போட்டி அளவில் தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளைத் தொடர அதிக வாய்ப்புகளை உருவாக்க, தமது பயணம் தம்மைப் போன்ற மற்றவர்களையும் இதில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று அவர் நம்புகிறார்.
2019 ஏப்ரல் 3ஆம் தேதியன்று அப்போதைய உடற்கல்வி ஆசிரியரான திரு லியோங்கின் வாழ்க்கை மாறியது. அவர் தனக்குள் குளிர்ச்சியான நிலையை அனுபவித்தார். விரைவில் அவருக்கு 41 டிகிரி செல்சியஸ் காய்ச்சல் ஏற்பட்டது. மாலையில், அவர் சிறுநீரில் ரத்தத்தின் தடயங்களைக் கண்டறிந்து தனது மனைவியுடன் மருத்துவமனைக்குச் சென்றார்.
மருத்துவமனையை அடைவதற்குள், அவருக்கு சுயநினைவு இழந்தும் மீண்டும் திரும்பி வந்தும் கொண்டிருந்தது. நள்ளிரவுக்குப் பிறகு, அவரது கைவிரல்கள், கால்விரல்கள், உதடுகள் நீல நிறமாக மாறின. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் மதியம், அவர் கோமா நிலைக்குச் சென்றார். அவரது கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவை செயலிழக்கத் தொடங்கின.
"நான் வேகமாக இறந்து கொண்டிருந்தேன். மருத்துவர்கள் என் குடும்பத்தை எனது மோசமான நிலைக்குத் தயார்ப்படுத்தினார்கள். என்னிடமிருந்து விடைபெற என் மனைவியிடம் சொன்னார்கள்" என்று திரு லியோங் கடந்த செவ்வாழ்க்கிழமை தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
இதற்குக் காரணம், 'ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பி' என்ற பொதுவான கிருமியாகும். பொதுவாக தொண்டை வலியை ஏற்படுத்தும் இக்கிருமி அவரது ரத்த ஓட்டத்தில் நுழைந்தது. அவரைக் காப்பாற்றும் கடைசி முயற்சியாக மருத்துவர்கள் மாற்று மருந்துகளை அவரது உடலில் செலுத்தினர். அதிர்ஷ்டவசமாக அந்த சிகிச்சை பலனளித்தது.
ஆனால் அவரது அவலம் தீர்ந்த பாடில்லை. அவரது இடது காலில் இருந்த இரண்டு விரல்கள் அவற்றின் பயன்பாட்டைப் பாதுகாக்க அவரது வலது கையில் ஒட்டப்பட்டன. ஜூன் 2019ன் பிற்பகுதியில், மருத்துவர்கள் அவரது வலது பாதத்தையும் நவம்பரில் அவரது இடது பாதத்தையும் துண்டிக்க வேண்டியிருந்தது.
இரண்டு குழந்தைகளின் தந்தை அவர், "என் உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டன. ஒரு நல்ல கணவனாக, தந்தையாக, மனிதனாக இருக்க வேண்டும் என்ற எனது கனவு சிதைத்துவிட்டது," என்றார்.
ஆனால், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மருத்துவக் குழுவின் வலுவான ஆதரவுடன், பல மணிநேர இயன்மருத்துவம், உடல் செயல்முறை சிகிச்சை ஆகியவற்றின் மூலம் திரு லியோங் மெதுவாக தனது வலிமையை மீட்டெடுத்தார்.
ஏப்ரல் 2020ல், அவர் சக்கர நாற்காலியில் இருந்தபோது மற்றோர் ஆசிரியரின் உதவியுடன் உடற்கல்வியைக் கற்பிக்க இணை ஆசிரியராகப் பள்ளிக்குத் திரும்பினார். அந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள், அவர் கைத்தடி இல்லாமல், செயற்கைக் கால்களுடன் சுதந்திரமாகச் சுற்றி வர முடிந்தது.
மீண்டும் விளையாட்டிற்குச் செல்லத் தீர்மானித்த திரு லியோங், உலகெங்கிலும் உள்ள ஏராளமான உடற்குறையுள்ள வீரர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அத்தகையோருக்கு ஏற்ற புதிய உடற்பயிற்சிகளையும் அவர் கற்றுக்கொண்டார்.
தற்போது 'ஸ்போர்ட்எஸ்ஜி' அமைப்பில் உள்ள 'ஸ்போர்ட்கேர்ஸ்' குழுவில் மூத்த மேலாளராக இருக்கும் திரு லியோங், மேலும் பல உடற்குறையுள்ளோருக்கு உதவ நம்பிக்கையுடன் இருக்கிறார்.