ஆண்களுக்கு இடையேயான பாலியல் நடவடிக்கைகளை குற்றமாக்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டால், ஒவ்வோர் அமைச்சும் அதன் தாக்கம் மற்றும் விளைவு களைச் சந்தித்து, சமூகத்தின் பண்புநெறிகளுக்கு ஏற்ப என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிய வேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
பிப்ரவரி 28 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றம், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர குற்றவியல் தண்ட னைச் சட்டப் பிரிவு தொகுப்பின் 377A பிரிவைப் பயன்படுத்த முடியாது என்று தீர்ப்பளித்த பின்னர், அந்தச் சட்டம் குறித்த அவரது கருத்துகள் நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது இரண்டு முறை எழுப்பப்பட்டன.
கடந்த வியாழக்கிழமை, 'ஃபோகஸ் ஆன் ஃபேமிலி சிங்கப்பூர்' அமைப்பினால் ஏற்பாடு செய்த, 'ஸ்டேட் ஆஃப் ஃபேமிலி 2022' எனும் கருத்தரங்கில், அரசாங்கம் சட்டத்தை மாற்றப் போகிறதா என்றும் இதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்தும் திரு சண்முகத்திடம் கேட்கப்பட்டது. இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பள்ளிகளில் பாலியல் கல்வியில் மாற்றங்கள் ஏற்படுமா என்றும் அமைச்சரிடம் கேட்கப்பட்டது என்று உள்துறை அமைச்சு நேற்று முன்தினம் தனது இணையத் தளத்தில் தெரிவித்தது.
இம்மாதம் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரிவு 377A குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவித்த திரு சண்முகம், இந்த விவகாரத்தில் தனது தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். நாடாளுமன்றத்தில் தாம் கூறிய விவரங்களுக்கு அப்பால் எதுவும் சொல்ல முடியாது என்றும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை மிகவும் கவனமாக ஆராயப்பட்ட ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
திருமணம் மற்றும் குடும்பம் தொடர்பான சமூக அணுகுமுறைகள் மாறிவருவதை அவர் குறிப்பிட்டார். "சிங்கப்பூர் பாரம்பரிய பாலின குடும்ப பண்புநெறிகளைக் கொண்ட நிலையான சமுதாயத்தை நிலைநிறுத்தும். ஆனால் ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் வாழ்க்கையை வாழவும் சமூகத்திற்குப் பங்களிக்கவும் அது இடமளிக்கும்," என்றும் கூறினார்.
சமூகத்தின் பார்வையில் ஏற்படும் மாற்றங்களைத் தெரிந்துகொள்ள சட்டங்களுடன் பொதுக் கொள்கைகளும் உருவாக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

