வெளியில் முழு சுதந்திரத்துடன் நடமாட இயலாமல், வேலையிடம், தங்கும் விடுதி என முடங்கி இருந்த வெளிநாட்டு ஊழியர்களில் ஒரு சிலருக்கு, கூசு தீவுக்குச் செல்லும் அரிய வாய்ப்பு கிடைத்தது.
மனிதவள அமைச்சின் 'ஃபாஸ்ட்' குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட 51 பேர், இந்தச் சுற்றுலாவில் பங்கேற்றனர்.
தங்குவிடுதி ஊழியர்களுக்கும் நடத்துநர்களுக்கும் ஃபாஸ்ட் குழு உதவி வருகிறது.
உட்லண்ட்ஸ் தங்குவிடுதி, நார்த் கோஸ்ட் தங்குவிடுதி ஆகிய விடுதிகளிலும் கேலாங் பிஆர்பி சென்ட்ரலில் உள்ள வீடுகளிலும் தங்கிய ஊழியர்கள் இதில் கலந்துகொண்டனர்.
ஜனவரி 30ஆம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணிக்கு முடிந்தது அவர்களின் பயணம்.
கூசு தீவிலுள்ள இயற்கைக் காட்சிகள், கடற்கரைகள், 'துவா பெக் கோங்' சீன கோவில், முஸ்லிம் பெருமக்கள் மூவரின் கல்லறைகள் அடங்கிய 'கிராமாட்' நினைவிடம் போன்ற பல இடங்களை ஊழியர்கள் சுற்றிப் பார்த்தனர்.
ஊழியர்களுடன் சென்றிருந்த மனிதவள அமைச்சு அதிகாரிகள், தங்கள் வீட்டில் செய்து வைத்திருந்த திண்பண்டங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
அனைவரும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்ட பின்னர் விளையாட்டுகளில் ஈடுபட்டனர்
பயணத்தில் பங்குபெற்றோரில் ஒருவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கட்டுமான ஊழியர் வீரபத்திரன் சரவணன், 38, தீவிலுள்ள சீனக் கோயில்களைக் கண்டு ரசித்ததாகக் கூறினார்.
"சிங்கப்பூரின் பழங்கால வரலாறு பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் இதுபோன்ற வாய்ப்பு எங்களுக்கு அதிகம் கிடைப்பதில்லை," என்று அவர் கூறினார்.
'சிண்டோ' பயணக் கப்பல் நிறுவனம் ஊழியர்கள் அனைவருக்கும் படகுப் பயணத்துக்கான நுழைவுச் சீட்டுகளை இலவசமாக வழங்கியது.

