பேராசிரியர் லியோ யீ சின்னின் மகன் கடந்த மாதம் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டபோது, அவர் தனது அறையில் தனிமைப்படுத்திக்கொண்டு உயிர்வாயுமானி மூலம் தனது உயிர்வாயு அளவைக் கண்காணித்தார்.
அவரது தொண்டை மிகவும் புண்ணாக இருந்தது. நல்லவேளையாக அவர் குணமடைந்தார். அவரது வீட்டில் வேறு யாருக்கும் தொற்று இல்லை.
தனது மகன் கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து குணமாகியது குறித்து பேராசிரியர் லியோவுக்கு நிம்மதிப் பெருமூச்சு.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் நிர்வாக ஆசிரியர் சுமிக்கோ டானின் 'லஞ்ச் வித் சுமிக்கோ' பகுதிக்கு இம்முறை தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் லியோ யீ சின் நேர்காணல் செய்யப்பட்டார்.
அப்போது அவர் கொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்க்கும் தேசிய முயற்சியில் தாம் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
கொவிட்-19 கிருமி தோன்றிய இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில், அவர் துன்பகரமான கடுமையான சம்பவங்களை எதிர்கொண்டார்.
"நாங்கள் ஏராளமான நோயாளிகளைக் கண்டோம். ரத்த ஓட்டம் இல்லாததால், கைகள், கால்கள் கடும் தொற்று காரணமாக கருப்பாக மாறின. உண்மையில் அதைப் பார்ப்பதற்கு மிகவும் வேதனையாக இருந்தது," என்றார் திருவாட்டி லியோ.
கொவிட்-19 மட்டுமின்றி அது தொடர்பான சிக்கல்களுடன் போராடி தீவிர சிகிச்சைப் பிரிவில் பல மாதங்களை நோயாளிகள் கழித்தனர்.
கொவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவது பெரிய சவால்
"கொவிட்-19-ஐ எதிர்த்துப் போராடுவது என்பது மிகவும் சவாலானது. கிருமி உருமாறிக்கொண்டிருக்கும்போது, அதனுடன் தொடர்ந்து போராடுவதுதான் உச்சக்கட்ட சவால்.
"ஓமிக்ரான் டெல்டாவை விட வீரியம் குறைவானது என்று கூறப்பட்டாலும் சில பிரிவினர் குறிப்பாக, முதியவர்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள மருத்துவப் பிரச்சினைகள் உள்ளவர்கள், முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டவர்கள் உட்பட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
"டெல்டா உருமாறிய கிருமியுடன், மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் கவனிப்பு தேவை," என்று அவர் குறிப்பிட்டார்.
ஓமிக்ரான் ஒரு நோயாளியின் தற்போதைய மருத்துவ நிலைமை களை மோசமாக்கும். எனவே, கொவிட்-19 நோயாளிகளின் அறிகுறிகள் லேசானதாக இருந்தாலும், அந்தக் கிருமி அவருக்கு இருக்கும் மற்ற நோய்களை மோசமடையச் செய்யலாம்.
"ரத்த அழுத்தம் குறைந்துவிட்டதால் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறார்கள். அவர்கள் மிகவும் மயக்கமான நிலையில் இருப்பதுபோல் உணர்வார்கள். அவர்கள் கீழே விழுந்திருக்கலாம் அல்லது அவர்களுக்கு லேசான நிமோனியா காய்ச்சல் இருந்திருக்கலாம்," என்று பேராசிரியர் விவரித்தார்.
இந்த வயதான நோயாளிகள் குணமடையவும் மறுவாழ்வு பெறவும் நீண்ட காலம் தேவைப்படும். இது சுகாதாரப் பராமரிப்பு முறையில் பல்வேறு அழுத்தங்களை ஏற்படுத்துகிறது.
மருத்துவப் பிரச்சினைகளால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் வயதானவர்களைத் தவிர, ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளாகும் அதிக ஆபத்தை எதிர்நோக்கும் மற்றொரு பிரிவினர் சிறுநீரக நோயாளிகள், ரத்த சுத்திகரிப்பை மேற்கொண்டு வருபவர்கள், நாள்பட்ட நோயாளிகள் ஆகியோர்.
இந்தக் கிருமி தொடர்ந்து உருமாறி வருவதால் அடுத்த ஓர் ஆண்டுக்கு இந்த நிலைமை தொடரும் என்று அவர் கணித்துள்ளார்.
இன்னும் அதிகமான கிருமித்தொற்று சம்பவங்கள் இருந்தால் கிருமி இன்னும் வேகமாக உருமாறி எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும். ஆக, கிருமித்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் முக்கியம். இது கிருமி உருமாறுவதையும் மெதுவாக்கும் என்றார் திருவாட்டி லியோ.
கொவிட்-19 கிருமித்தொற்று மறைந்துவிடும் சாத்தியம் உண்டா?
"இது மறைந்துவிடாது. வைரஸ் இங்கே தொடர்ந்து நீடிக்கும். அதன் தொடர்பில் சில அம்சங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்," என்று அவர் எச்சரித்தார்.
ஒன்று, கொவிட்-19 கிருமி எவ்வாறு மனிதர்களுக்குத் தொற்றியது. அவர்களிடம் மீண்டும் மீண்டும் தொற்றும் திறன் ஆற்றல் எவ்வாறு அமைந்தது என்பது.
இரண்டு, கிருமி இப்போது பல்வேறு விலங்கினங்களை எவ்வாறு பாதிக்கிறது. அப்படி என்றால் அதிலேயே பல்வேறு கிருமி வகைகள் உள்ளன என்பது.
இந்த விலங்கினங்களில் உள்ள கிருமி நகல் வடிவம் எடுக்கலாம் மற்றும் உருமாறலாம். மனிதர்கள் விலங்குகளுக்கு கிருமியைப் பரப்பு வதும் பின்னர் விலங்குகளிலிருந்து கிருமி மனிதருக்குப் பரவுவதும் மிகவும் உண்மையானது.
சிங்கப்பூரில் ஓமிக்ரான் கிருமியின் உச்சம் கடந்துவிட்டதா?
சிங்கப்பூரில் ஓமிக்ரான் கிருமியின் உச்சம் கடந்துவிட்டதா என்று கேட்கப்பட்டதற்கு, பேராசிரியர் லியோ கிருமித்தொற்று சம்பவங்கள் படிப்படியாகக் குறையும் என்று பலர் எதிர்பார்ப்பதால், தானும் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார்.
இந்தப் பெருந்தொற்று, மக்கள் தங்களுக்கு சுவாசப் பிரச்சினை வராமல் தவிர்ப்பதற்கு என்னென்ன வழிகளைக் கடைப்பிடிக்கலாம் என்று தங்களுக்குள்ளேயே ஓர் ஒழுங்குமுறையை ஏற்படுத்திக்கொள்ள வழிவகுத்துள்ளது என்று பேராசிரியர் லியோ கருதுகிறார்.
"கொவிட்-19க்கு முந்தைய வாழ்க்கைக்குத் திரும்ப மக்கள் விரும்புவது மனித இயல்பு. ஆனால் அதேநேரத்தில், கொவிட்-19 நமக்குக் கற்றுக் கொடுத்ததை நாம் ஆராய்வதும் முக்கியம்," என்று அவர் குறிப்பிட்டார்.

