2020ல் தொற்றுநோய் உச்சத்தில் இருந்த காலத்துடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரில் இளையர்களின் வேலைவாய்ப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்று கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட தனது 2021 தொழிலாளர் சந்தை தொடர்பான அறிக்கையில், சிங்கப்பூரில் உள்ள 15க்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட குடியுரிமை மற்றும் நிரந்தரவாசத் தகுதி பெற்ற இளையர்களின் வேலையின்மை விகிதம் 2020ல் இருந்த 10.6 விழுக்காட்டிலிருந்து 7.3 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இளையர்கள் முக்கியமாக பொது நிர்வாகம், கல்வி, சுகாதாரம், சமூக சேவைகள் போன்ற துறைகளிலும், நம்பிக்கையான பொருளியல் நிலைமைகளுக்கு மத்தியில் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்திலும் வேலைவாய்ப்பைப் பெற்றனர்.
மேம்பட்ட பொருளியல் நிலைமை அதிக இளையர்களை வேலைச் சந்தையில் நுழைய ஈர்த்துள்ளது என்று மனிதவள அமைச்சு கூறியது.
2018, 2019 எனும் கொவிட்-19க்கு முந்தைய ஆண்டுகளில் இருந்த சுமார் 38 விழுக்காட்டைவிட இளையர் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2021ல் 41.3 விழுக்காடாக இருந்தது.
இந்த அதிகரித்த பங்கேற்பு, 2021ல் இளையர் வேலையின்மை விகிதம் உயர்ந்ததற்குக் காரணமாக அமைந்தது. ஒப்புநோக்க, அது 2018ல் 6.6 விழுக்காடாக இருந்தது என்று அமைச்சு விவரித்தது.
இளையர்களின் வேலையின்மை விகிதம் தற்காலிகமானது அல்லது குறுகிய காலத்துக்கு நீடிக்கக்கூடியது.
2021ஆம் ஆண்டில், நீண்டகாலத்துக்கு வேலையில்லாமல் இருந்த இளையர்களின் விகிதம் 16.4 விழுக்காடாக இருந்தது. இது பெரியவர்கள் தொடர்பான விகி தத்தைவிட குறைவாகும். உதாரணமாக, 50 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களில் 34.6 விழுக்காட்டினர் நீண்டகாலம் வேலை இல்லாமல் இருந்தனர்.
2018ஆம் ஆண்டின் இதே காலாண்டின் 53 விழுக்காட்டினருடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு சிறிய பெரும்பான்மையில், அதாவது, 56 விழுக்காட்டினர் முழுநேரப் பணி புரிந்துள்ளனர்.
அந்த அறிக்கையில், வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சி ஆகியவற்றில் அல்லாமல் சிங்கப்பூரில் இளையர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
2020ஆம் ஆண்டில் கொவிட்-19 தொற்றுநோய் உச்சத்தில் இருந்த காலத்தில் 5.3 விழுக்காட்டிலிருந்து இத்தகைய இளையர்களின் வேலையில்லா விகிதம் 4.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
"இது எங்களின் தரமான கல்வி மற்றும் பயிற்சி முறையைப் பிரதி பலிக்கிறது. இது 2021ல் இளையர்கள் அதிக முழுநேர வேலைவாய்ப்பைத் தேடியதால், இளையர்கள் வெற்றிகரமாக தொழிலாளர் சக்தியாக மாறுவதற்கு உதவியது என்றும் அமைச்சு கூறியது.

