செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
1eada971-bdb7-4b92-81e7-3fecabab9a16
-

ஓய்வுபெற்ற நீதிபதி ரிச்சர்ட் மேக்னஸ் காலமானார்

பொதுப் போக்குவரத்து மன்றத் தின் தலைவரும் ஓய்வுபெற்ற மூத்த மாவட்ட நீதிபதியுமான திரு ரிச்சர்ட் மேக்னஸ் (படம்) நேற்று காலமானார். அவருக்கு வயது 76. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பொதுச் சேவையில் ஈடுபட்டிருந்தார்.

திரு ரிச்சர்ட், 'தெமாசெக் ஃபவுண்டேஷன் கேர்ஸ்' அமைப்பை தோன்றுவித்த தலைவர், தெமாசெக் அறநிறுவனத்தின் துணைத் தலைவர். பொதுச் சேவைக்கு அவர் ஆற்றிய அரும் பங்களிப்புக்காக அவர் 2003ல் பொது நிர்வாகத் தங்கப் பதக்கம் (பார்), 2009ல் மெச்சத்தக்க சேவை விருது, 2015ல் பொதுச் சேவை நட்சத்திர விருது, 2021ல் மேன்மைதங்கிய சேவை விருது ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சிங்கப்பூர் சுதந்திரமடைந்த ஆரம்ப நாட்களில் சட்ட அதிகாரியாகத் தமது பணியைத் தொடங்கிய திரு மேக்னஸ், பின்னர் நீதித்துறைக்குச் சென்று அரசு நீதிமன்றங்கள் என அழைக்கப்படும் முன்னாள் துணை நீதிமன்றங்களில் உயர்மட்ட நீதிபதியாக உயர்ந்தார். அங்கு நிலுவையில் இருந்த பல வழக்குகளை தீர்த்து வைத்ததில் முக்கிய பங்காற்றினார். மேலும் பல உயர்மட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கினார். அதில் 1995ஆம் ஆண்டு பேரிங்ஸ் வர்த்தகர் நிக் லீசன் மோசடிக்காக ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற வழக்கும் அடங்கும்.

1992ல் செம்பவாங் கப்பற்பட்டறை தீ விபத்து, 2004ல் நிக்கல் ஹைவே நெடுஞ்சாலையின் ஒரு பகுதி சரிவு, 2018ல் சிங்ஹெல்த் தரவு விதிமீறல் போன்ற பல விசார ணைக் குழுக்களுக்கு திரு மேக்னஸ் தலைமை தாங்கினார். 2008ல் சட்டத்துறையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, அவர் மற்ற உயர்மட்ட பொறுப்புகளை ஏற்றார். கசினோ எனும் சூதாட்டக்கூட ஒழுங்குமுறை ஆணையத்தின் முதல் தலைவராக இருந்தார். மே 2014ல் பொதுப் போக்குவரத்து மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 10,000க்குகீழ் குறைந்தது

சிங்கப்பூரில் புதிதாக கொவிட்-19 தொற்றியவர்களின் எண்ணிக்கை, ஒரு மாதத்தில் முதன்முறையாக 10,000க்கும் கீழ் குறைந்தது. நேற்று முன்தினம் 9,701 பேருக்கு கிருமித் தொற்று பதிவானதாக சுகாதார அமைச்சு அதன் அன்றாட அறிக்கையில் தெரிவித்தது.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதிக்குப் பின்னர் இப்போது தான் புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 10,000க்கும் கீழே குறைந்துள்ளது. அத்துடன், 1,348 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். ஒப்புநோக்க சனிக்கிழமை அன்று 1,375 பேர் மருத்துவ மனைகளில் சிக்சை பெற்றனர்; 12,632 பேருக்கு புதிதாக கொவிட்-19 தொற்று ஏற்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மேலும், வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் தொடர்ந்து ஒன்றுக்குகீழ் உள்ளது. நேற்று முன்தினம் 0.87 எனும் விகிதம் பதிவானது. மார்ச் 2 முதல், தொடர்ந்து 12வது நாளாக ஒன்றுக்கும் குறைவான வாராந்திரத் தொற்றுப் பரவல் விகிதம் பதிவாகி உள்ளது.

தொற்றுப் பரவல் விகிதம் ஒன்றுக்குகீழே இருந்தால், அந்த வாரத்தில் புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று பொருள்படும். அத்துடன், கொவிட்-19 தொற்று காரணமாக ஆறு பேர் உயிர் இழந்தனர் என்று நேற்று முன்தினம் சுகாதார அமைச்சு கூறியது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 32 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். 181 பேருக்கு செயற்கை உயிர்வாயு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வசதி குறைந்த குடும்பங்களுக்கு 730,000 முகக்கவசப் பெட்டிகள் விநியோகம்

ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த தெமாசெக் அறநிறுவனத் தின் அண்மைய முகக்கவச விநியோக இயக்கத்தில் 730,000க்கு மேற்பட்ட வசதி குறைந்த குடும்பங்கள் மருத்துவ முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டன. பிப்ரவரி 28ஆம் தேதி அன்று தொடங்கிய இந்த இயக்கத்தில் நீலம் அல்லது ஆரஞ்சு நிற 'சாஸ்' அட்டைகள் அல்லது பொது உதவி அட்டைகள் உள்ளவர்கள் இலவச முகக்கவசங் களைப் பெற்றனர்.

"தளவாட நிறுவனங்கள் முதல் சேகரிப்பு மையங்கள் வரை எங்கள் அனைத்து பங்காளிகளுக்கும், விநியோகிக்க உதவியவர்களுக்கும் பொதுமக்கள் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கும் முன்வந்த அனைத்துத் தரப்புத் தொண்டூழி யர்களுக்கும் நாங்கள் நன்றி கூறிக்கொள்கிறோம்," என்று தெமாசெக் அறநிறுவனத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். இந்த இயக்கத்தில் முதல் முறை யாக சுமார் 900 பொதுத் தொண்டூழியர்கள் முகக்கவச விநியோகப் பணிகளில் பங்கேற்றனர் என்றும் கூறப்பட்டது.