பொது மருத்துவர் குவேக் கோ சூன், பல ஆண்டுகளாக தமது வேலையில் அடிக்கடி தெரிந்த முகங்களைப் பார்க்கிறார்.
"பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த குழந்தைகள் இப்போது பெற்றோர்களாக உள்ளனர். இப்போது அவர்கள் தங்கள் குழந்தைகளை என்னைப் பார்க்க அழைத்து வருகிறார்கள்.
"அவர்களின் பெற்றோர் இன்னும் என்னிடம் மருத்துவ ஆலோசனை பெற்று வருகின்றனர்," என்று சுமார் 40 ஆண்டுகளாக பிடோக் நார்த் வட்டாரத்தில் உள்ள மருந்தகத்தை நடத்தி வரும் 73 வயது டாக்டர் குவேக் கூறினார்.
ஒரு நோயாளி-மருத்துவர் உறவை கட்டிக்காக்க நீண்டகாலம் ஆகிறது. அவருடைய நோயாளிகளின் மருத்துவப் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்வதற்கு அது பெரிதும் உதவுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நீண்டகால நோயாளி ஒருவர், கழிவறைச் சுவரில் தலையை இடித் துக் கொண்ட பிறகு கடுமையான தலைவலி பற்றி புகார் செய்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
டாக்டர் குவேக் அவருக்கு 'சப்டுரல் ஹீமாடோமா' அதாவது மண்டை ஓட்டுக்கும் மூளையின் மேற்பரப்புக்கும் இடையில் ரத்தக்கட்டு உருவாகி இருப்பதைக் கண்டறிந்தார். ஆனால் அவர் சுயநினைவை இழக்கவில்லை அல்லது வாந்தி எடுக்கவில்லை.
"இந்த நோயாளி வலியைத் தாங்கக்கூடியவர் என்பதை அறிந்ததால், ஆரம்பகட்ட சோதனைகள் அபாய அறிகுறி எதையும் காட்டவில்லை என்றாலும் நான் அவரை 'ஸ்கேன்' செய்ய பரிந்துரைத்தேன்," என்றார் டாக்டர் குவேக்.
சிங்கப்பூரின் மக்கள்தொகை வேகமாக மூப்படைந்து வருவதால், அதிகமான மக்கள் ஒரு பொது மருத்துவர் போன்ற வழக்கமான முதன்மை பராமரிப்பு மருத்துவரைக் கொண்டிருப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதனால் மருத்துவமனையை மையமாகக் கொண்ட மருத்துவ சேவையிலிருந்து நோய் தவிர்ப்புப் பராமரிப்புக்கு மாற முடியும்.
குடியிருப்பாளர்கள் அடுத்த ஆண்டு முதல் தங்கள் விருப்பப்படி ஒரு பொது மருத்துவர் அல்லது பலதுறை மருந்தகத்தின் மருத்துவரிடம் பதிவு செய்ய அழைக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சு கடந்த புதன்கிழமை தெரிவித்தது.
இது ஏற்கனவே வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது. உதாரணமாக, பிரிட்டனில், உடல் நலப் பிரச்சினை உள்ளவர்கள் வழக்கமாக பொது மருத்துவரைத்தான் முதலில் பார்ப்பார்கள்.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங், கடந்த வாரம் தனது அமைச்சின் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, 'ஹெல்த்தியர் எஸ்ஜி உத்தி' எனும் திட்டத்தை அறிவித்தார்.
இந்த மருத்துவர்கள் ஒரு தனிநபரின் வாழ்நாள் முழுவதும் அவரது உடல்நலத் தேவைகளைக் கவனித்துக்கொள்ள முடியும். முடிந்தவரை அவர் மருத்துவமனைக்குப் போவதைத் தடுக்கவும் மருத்துவ கவனிப்பை உறுதி செய்யவும் முடியும். இது இப்போது தற்காலிக அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
ஐந்து சிங்கப்பூரர்களில் மூன்று பேருக்கு மட்டுமே தற்போது வழக்கமான பொது மருத்துவர் இருப்பதாக திரு ஓங் குறிப்பிட்டார்.
உதாரணத்துக்கு, நோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் தேவையா என்பதைத் தீர்மானிக்க, நாள்பட்ட மருத்துவப் பிரச்சி னைகள், தடுப்பூசிகள் ஆகியவற்றை நிர்வகிப்பதற்கான வழக்கமான தொடர் ஆலோசனைகளுக்கு நோயாளிகள் தங்கள் பொது மருத்துவர்களைச் சந்திப்பார்கள்.
தனியார் மருத்துவர்கள் பொது மருத்துவர் கட்டமைப்புடன் இணைக்கப்படுவார்கள். அதனால் அவர்கள் நோயாளிகளின் மருத்துவப் பதிவுகளை பார்க்க முடியும். பொது மருத்துவர்கள் மின்னியல் சுகாதாரப் பதிவு அமைப்பில் எந்த புதிய விவரங்களையும் பதிவு செய்யலாம்.
ஒரு பொது மருத்துவரிடம் ஆலோசனை பெறும் இந்தத் திட்டம் வெற்றிபெற, மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையேயான நல்லுறவு முக்கியமாக விளங்கும்.
இதற்கு இந்த அமைப்பில் சில நீக்குப்போக்குத்தன்மை இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார் ஹெல்த்வே மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவர் டாக்டர் நெல்சன் வீ.
"நோயாளியின் தரப்பில் மகிழ்ச்சியின்மை இருந்தால், இது சரியாக வேலை செய்யாமல் போகலாம். அப்போது அதே மருந்தகத்திலிருந்து மருத்துவர்களை மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்," என்று டாக்டர் குவேக் கூறினார்.
'ஹெல்த்தியர் எஸ்ஜி உத்தி' எனும் திட்டம் தொடர்பாக தனது பங்காளிகளுடன் வரும் மாதங்களில் சுகாதார அமைச்சு ஆலோசனை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

