பார்சி சமூகத்தினருக்கான அரும்பொருளகம் ஒன்று நேற்று இங்கு திறக்கப்பட்டது. இதன்மூலம் அந்தச் சமூகத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு சிங்கப்பூரர்களுக்குக் கிட்டியுள்ளது.
ரோச்சோர் வட்டாரத்தின் டெஸ்கர் ரோட்டில் உள்ள ஸொரோஸ்ட்ரிய கட்டடத்தில் அரும்பொருளகம் இடம்பெற்று உள்ளது.
பண்டைய ஸோரோஸ்ட்ரிய சமயத்தின் வழித்தோன்றல் பார்சி சமூகம் என வரலாறு குறிப்பிடுகிறது. அந்தச் சமூகத்தைப் பிரதிநிதிக்கும் சுமார் 350 பேர் இங்கு உள்ளனர். மேலும், சிங்கப்பூரின் அங்கீகாரத்தைப் பெற்ற பத்து சமயங்களில் ஒன்று ஸோரோஸ்ட்ரிய சமயம்.
'ஜாயஸ் ஃபிளேம்' என்ற பெயரில் இரண்டு தளங்களில் அமைக்கப்பட்டு உள்ள அரும்பொருளகம் நிரந்தரக் காட்சிக் கூடமாகத் தொடரும். பழங்காலத்தில் பார்சி சமூகத்தினர் பயன்படுத்திய பொருள்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
சமய ரீதியான தொல்லைகளில் இருந்து விடுபட கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மேற்கு இந்தியாவிற்குக் குடிபெயர்ந்தவர்கள் பார்சிய சமூகத்தினர். ஆதி காலத்தில் இவர்கள் பெர்ஷியர் என அழைக்கப்பட்டனர். சிங்கப்பூரிலும் அவர்கள் தடம் பதித்த வரலாறு உண்டு. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்னர் கைதியாக இங்கு கொண்டுவரப்பட்ட மன்செர்ஜீ என்பவரே இங்கு கால்பதித்த முதல் பார்சி ஆவார்.
"இப்போது நிறுவப்பட்டுள்ள அரும்பொருளகத்தை இதற்கு முன்னர் நாங்கள் கண்டதில்லை. கடந்த பத்து, இருபது ஆண்டுகளாக எங்களது எண்ணிக்கை வளர்ந்துவருவதால் இப்படி ஒரு காட்சிக்கூடம் அவசியம் என்னும் உணர்வு அதி
கரித்துள்ளது," என்று தென்கிழக்காசிய பார்சி ஸோரோஸ்ட்ரிய சங்கத்தின் தலைவர் ஹோமியர் வாசனியா கூறினார்.
"எங்களது சமூகத்தினர் தங்களது வரலாற்றையும் கலாசாரத்தையும் அதிகம் தெரிந்துகொள்ள இது தேவை என்பதையும் உணர்ந்தோம். எங்களைப் பற்றி நாங்கள் தெரிந்துகொள்ள இந்த அரும்பொருளகத்தை அவசியமான ஒன்றாகக் கருதுகிறோம்," என்றார் அவர்.
தங்களது சமூகத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவலில் பல்வேறு பள்ளிக்கூடங்கள், அரும்பொருளகங்கள், அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது சங்கத்தை அணுகியதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த அரும்பொருளகத்துக்கான கட்டுமானப் பணி கொவிட்-19 கொள்ளைநோய் பரவுவதற்கு சில மாதங்கள் முன்னதாகத் தொடங்கியதாக திரு ஹோமியர் குறிப்பிட்டார்.
அரும்பொருளகத் திறப்பு நிகழ்வில் பங்கேற்ற கலாசார, சமூக, விளையாட்டுத் துறை அமைச்சர் எட்வின் டோங், பார்சி சமயத்தினர் அளவில் சிறிதாக இருந்தபோதிலும் சிங்கப்பூரின் வளமான சமூக ஒருங்கிணைப்புக்குத் துடிப்புடன் பங்காற்றி வருவதாகக் கூறினார். சிங்கப்பூரர்கள் இச்சமூகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த அரும்பொருளகம் உதவும் என்றார் அவர்.
தொடக்கத்தில் காலூன்றிய பார்சி சமூகத்தினர், எண்ணிக்கையில் சிறிய அளவில் இருந்தபோதிலும் செல்வந்தர்களாக உருவெடுத்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தனர். இந்து, இஸ்லாம், சீன கலாசாரங்களில் தங்களைக் கவர்ந்த அம்சங்களைத் தங்களது பழக்கவழக்கங்களில் பின்பற்றி இங்கு சிறப்பான முறையில் ஒருங்கிணைந்தனர்.
அவர்களின் கொடுத்து உதவும் குணமும் வர்த்தக நடவடிக்கைகளும் இங்கு பிரபலமாக விளங்கின. குறிப்பாக, 1952ஆம் ஆண்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவுக்குக் கட்டடம் எழுப்ப, சிங்கப்பூரில் பிரபல தொழில்முனைவராக விளங்கிய பார்சி சமூகத்தைச் சேர்ந்த நவ்ரோஜி மிஸ்ட்ரி அந்தக் காலத்திலேயே $1 மில்லியன் நன்கொடை வழங்கினார்.

