ஆடம்பர பங்களாக்களை உள்ளடக்கிய குடியிருப்புச் சந்தை (குட் கிளாஸ் பங்களா) கடந்த ஆண்டு ஏற்றம் கண்டது. கைமாறிய வீடுகளின் எண்ணிக்கையும் அவற்றின் விலைகளும் புதிய உச்சத்தைத் தொட்டன.
2021 முதல் பாதியில் கண்ட ஏற்றம் ஆண்டின் பிற்பாதியிலும், ஆண்டிறுதி விழாக்கள் மற்றும் குறைவான விநியோகத்திற்கு மத்தியில் அதேவேகத்துடன் தொடர்ந்ததாக சிபிஆர்இ பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டின் பிற்பாதியில் மட்டும் $1.22 பில்லியன் மதிப்புள்ள 40 பரிவர்த்தனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாக சிபிஆர்இ கூறியது. இதனையும் சேர்த்து அந்த ஆண்டின் முழுமைக்குமான பரிவர்த்தனையின் எண்ணிக்கையை 99க்கு உயர்த்தியது. அதன் மதிப்பு $3 பில்லியன்.
2010ஆம் ஆண்டு $2.43 பில்லியனுக்குப் பரிவர்த்தனைகள் நடந்ததே இதுவரை சாதனை அளவாக இருந்து வந்தது. கடந்த ஆண்டின் செயல்பாடு அதனை மிஞ்சிவிட்டது.
அத்துடன் 2020ஆம் ஆண்டு ஆடம்பரச் சொத்துகள் கைமாறிய மதிப்பைக் காட்டிலும் கடந்த ஆண்டின் மதிப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்கு.
2020ஆம் ஆண்டு $1.09 பில்லியன் மதிப்பிலான பரிவர்த்தனைகள் இடம்பெற்றன.
'குட் கிளாஸ் பங்களா' என்பது அதிக பரப்பளவில் அமைந்திருக்கக்கூடிய ஆடம்பர வீடுகளைக் குறிக்கும்.
குறைந்தபட்சம் 1,400 சதுர மீட்டர் அல்லது 15,070 சதுர அடியில் ஒவ்வொரு வீடும் அமைந்திருக்கும்.
சிசிபி என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த வீடுகளே சிங்கப்பூரின் வீடமைப்புச் சொத்துச் சந்தையில் உச்சத்தில் இருப்பவை.

