சிங்கப்பூர் முதலாளியால் நன்றாக நடத்தப்பட்ட இல்லப் பணிப்பெண் ஒருவர், தன் மீது முதலாளி வைத்திருந்த நம்பிக்கையைப் பயன் படுத்தி எட்டாயிரம் வெள்ளி மதிப்புள்ள பொருட்களையும் ரொக்கத்தையும் திருடியிருக்கிறார்.
வினா கியுேராதுனைனி, 27, எனும் அந்த இந்தோனீசியப் பணிப்பெண், திருடிய பெரும்பாலான நகைகளை அடகு வைத்து தனது கடனை அடைக்கவும் நண்பர் களுக்கு விருந்து, நகைகள் வாங்கவும் பயன்படுத்தினார். ஒரு பகுதி ரொக்கத்தை அவர் தனது சொந்த நாட்டில் உள்ள வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
நேற்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் வினா தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நாற்பது வயது சிங்கப்பூர் மாது ஒருவர், அவரை 2018 ஜூலையில் கிளமெண்டியில் உள்ள தனது வீட்டில் வேலைக்கு அமர்த்திக்கொண்டார். அங்கு வீட்டு வேலைகளைச் செய்து முதலாளியின் குழந்தைகளை அவர் கவனித்துக்கொண்டார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் முதலாளியின் படுக்கை அறையைச் சுத்தம் செய்தபோது சாவி ஒன்று இழுப்புப் பெட்டியில் தொங்கிக் கொண்டிருந்ததை அவர் பார்த்தார்.
அதனை திறந்துபார்த்தபோது அதில் 2,000 வெள்ளி ரொக்கமும் சில தங்க நகைகளும் இருப்பதைக் கண்டார். வினா அவற்றைத் திருட முடிவு செய்தார்.
திருடிய பொருட்களையும் பணத்தையும் மறைத்துவைத்த வினா பின்னர் பெரும்பாலான நகைகளை அடகு வைத்ததாக நீதிமன்றத்தில் அரசாங்க விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜனவரி 22ஆம் தேதி சில நகைகள் காணாமல்போனதை அறிந்த முதலாளி காவல்துறையிடம் புகார் அளித்தார்.
வினா மீது சந்தேகம் இருப்பதாகவும் காவல்துறையிடம் முதலாளி கூறியிருந்தார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட வினா மீது ஜனவரி மாதம் இறுதியில் குற்றம்சாட்டப்பட்டது.
"$180 மதிப்புள்ள நகை குற்றவாளியிடமிருந்து மீட்கப்பட்டது. மற்ற நகைகள் வெவ்வேறு அடகு கடைகளிலிருந்து மீட்கப்பட்டன, ெராக்கத்தை மீட்க முடியவில்லை." என்று விசாரணை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

