புக்கிட் பாஞ்சாங்கில் அமைந்துள்ள ஸெங்ஹுவா குடியிருப்புப் பேட்டைக்குள் காட்டுப் பன்றிகள் நுழைந்திருக்கின்றன. இதனால் அவ்வட்டார வாசிகள் தங்கள் பாதுகாப்பு குறித்து அக்கறை தெரிவித்துள்ளனர்.
ஸெங்ஹுவா இயற்கை பூங்காவிலிருந்து பன்றிகள் வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
பன்றிகளுக்கு உணவு கொடுக்கவேண்டாம் என்றும், பன்றிகளைப் பார்த்தால் அமைதியாக வேறு திசையில் நடந்தவிடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
பன்றிகளைப் பிடிக்க தேசியப் பூங்கா கழகத்தின் அதிகாரிகள் கடந்த மூன்று வாரங்களாக அந்த வட்டாரத்தில் இரவு நேரத்தில் வேலை பார்த்து வருகின்றனர். ஒரு ஆண் பன்றி அந்த இடத்தைவிட்டு வெளியேறி இருப்பதாகக் கூறப்பட்டது.
ஸெங்ஹுவா இயற்கை பூங்காவையும் குடியிருப்புப் பேட்டையையும் இணைக்கும் ஒரு வாயில்கதவு வழியாக பன்றிகள் மக்கள் வசிக்கும் இடத்துக்கு நுழைந்திருக்கலாம் என கழகம் கூறியது. அந்த வாயில்கதவு சேதமடைந்திருந்ததாகவும் அது திறக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
இதனிடையே, சென்ற வாரம் ஈசூனில் ஒரு பெண்ணைத் தாக்கிய காட்டுப் பன்றி இன்னும் சிக்கவில்லை. அதைப் பிடிக்க 20க்கும் மேற்பட்ட அதிகாரிக்ள கடந்த ஆறு நாள்களாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

