கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலால் மருத்துவமனைகள் இன்னமும் நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. இருந்தாலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் மோசமான பாதிப்பு ஏதும் இருக்காது என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று பாதிப்பு ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன் உச்சத்தைத் தொட்டது. இருந்தாலும், பொது மருத்துவமனைகள் கவனிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கொள்ளைநோய்ப் பரவல் வல்லுநரான பேராசிரியர் தியோ யிக் யிங் கூறினார். எனினும், இந்த ஆண்டு பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்பது அவரின் கருத்து.
கொவிட்-19 சூழலைக் கையாள நீக்குப்போக்கு அவசியம் என்று மற்றொரு வல்லுநரான தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் லியோ யீ சின் கூறினார்.
கட்டுப்பாடுகளைக் கட்டங்கட்டமாகத் தளர்த்தலாம் என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த கொள்ளைநோய்ப் பரவல் ஆலோசகர் பேராசிரியர் டேல் ஃபிஷர் கூறினார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய கொவிட்-19 தொடர்பிலான கலந்துரையாடலில் இவர்கள் பேசினர்.


