ஜூரோங் லேக் வட்டாரத்தில் அமையவிருக்கும் புதிய ஒருங்கிணைந்த பயணத்துறைத் தலத்திற்கான பரிந்துரைத் திட்டங்களை அதிகாரிகள் வரவேற்கின்றனர். புதிய வாழ்க்கைமுறை, பயணத்துறைத் தலமாக அமையவிருக்கும் இப்பகுதியில் உயர்தர தங்கும் வசதிகளுடன் கண்கவர் இடங்கள், சில்லறை வர்த்தகங்கள், உணவு, பானக் கடைகள், கேளிக்கை வசதிகள் ஆகியவையும் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
தொழில்நுட்பம், கல்வி அம்சங்களைக் கொண்ட கேளிக்கை, நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்தும் என்று கழகம் கூறியது.
இப்பகுதிக்கு அருகே ஏற்கெனவே ஜூரோங் லேக் பூங்கா, புதிய அறிவியல் நிலையம் போன்ற கண்கவர் இடங்கள் அமைந்துள்ளன. புதிய ஜூரோங் லேக் ஒருங்கிணைந்த பயணத்துறைத் தலம் அவற்றுக்கு மேலும் மெருகூட்டும் எனக் கருதுவதாக பயணத்துறைக் கழகம் சொன்னது.
இத்திட்டத்தைப் பற்றி 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 410 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட ஜூரோங் லேக் வட்டாரத்தில் 6.8 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட பகுதியை கழகம் இத்திட்டத்திற்காக ஒதுக்கியது.
ஜூரோங் லேக் வட்டாரம், மத்திய வர்த்தகப் பகுதிக்கு அடுத்தபடியாக சிங்கப்பூரின் ஆகப் பெரிய வர்த்தக வட்டாரம். ஜூரோங் லேக் ஒருங்கிணைந்த பயணத்துறை வட்டாரம், பூன் லே வே, ஜூரோங் டவுன் ஹால் சாலை ஆகியவற்றுக்கு நடுவே ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் அமையவுள்ளது.
நிறுவனங்கள் தங்களின் பரிந்துரைத் திட்டங்களை வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதிவரை சமர்ப்பிக்கலாம். 2019ஆம் ஆண்டிலும் சில நிறுவனங்கள் பரிந்துரைத் திட்டங்களை சமர்ப்பிப்பதில் விருப்பம் தெரிவித்தன. அந்த நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இத்திட்டம் 2028ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

