மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் இளையர்களால் இனி தங்களின் வீடுகளுக்கு அருகே உதவி பெற வகைசெய்யும் சமூகத் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் நான்கு சமூக சேவை அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மனநலப் பிரச்சினைகள் உள்ள 13லிருந்து 19 வயதுக்கு உட்பட்ட இளையர்களுக்கு உதவுவது இலக்கு.
மோசமான மனநலப் பிரச்சினைகள் இல்லாத இளையர்களுக்கு இந்த ஏற்பாடு பொருந்தும். மனவுளைச்சல் தொடர்பிலான குறைபாடுகள், மனச்சோர்வு, தவறான பழக்கங்களுக்கு அடிமையாவது, தங்களைக் காயப்படுத்திக்கொள்வது போன்ற பிரச்சினைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் உதவி வழங்கப்படும்.
இரண்டு பிரிவினருக்கு இந்தத் திட்டம் பொருந்தும். சமூக அளவில் கூடுதல் உதவி தேவைப்படக்கூடிய மனநலக் கழகத்தில் அனுமதிக்கப்படாமல் அங்கே சிகிச்சை பெற்றவர்கள், சிகிச்சை முடிந்த பிறகு மனநல உள்நோயாளிப் பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் அல்லது நிபுணத்துவ மருத்துவர்களிடம் தொடர்ந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆகியோர் பலனடைவர்.
அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று தொடங்கிவைத்த இத்திட்டத்தை 'கிளப் ஹீல்' அமைப்பு, மனநல உள்ளாய்வு நிலையத்திற்கான சிங்கப்பூர் சங்கம், சிங்கப்பூர் சிறுவர் சங்கம், 'டச் கம்யூனிட்டி சர்விசஸ்' நன்கொடை அமைப்பு ஆகியவை நடத்தும். மனநலக் கழகத்துடன் இணைந்து அதிபர் சவால் இதற்கு நிதி வழங்கும்.
இந்தத் திட்டம் கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட சமூக சேவை அமைப்புகள், மனநல ஆலோசகர்கள், சமூக சேவை ஊழியர்கள் போன்ற சுகாதார நிபுணர்களை நியமிக்கும்.
அடுத்த மாதம் முதல் இவ்வாண்டு டிசம்பர் மாதம் வரை இவர்களுக்கு மனநலக் கழகத்தில் பயிற்சியளிக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கழகம் நோயாளிகளை சம்பந்தப்பட்ட சமூக சேவை அமைப்புகளுக்கு அனுப்பும்.
மனநலக் கழகத்தில் சிகிச்சைப் பெறுவதால் பிறர் தங்களைத் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடும் என்ற அச்சம் பலருக்கு இருப்பதாக அதிபர் ஹலிமான தமது உரையில் குறிப்பிட்டார்.
"பராமரிப்பு வழங்கக்கூடிய சமுதாயத்தை வளர்க்கக் கூடுதல் முயற்சிகளை எடுக்கலாம், அடிப்படை பரிசோதனைகளை வழங்கவும் தகுந்த நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்கவும் சமூக சேவை அமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் அதைச் செய்யலாம்," என்று மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்களின் படைப்புகளைக் கொண்ட மெய்நிகர் காட்சியகம் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட திருவாட்டி ஹலிமா சொன்னார்.