செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
5ab8d392-567e-4e35-9e30-1d5a83629df1
-

ரிச்சர்ட் மேக்னசுக்குப் பிரதமர்

லீ சியன் லூங் மரியாதை

மறைந்த பொதுப் போக்குவரத்து மன்றத் தலைவரும் ஓய்வுபெற்ற மூத்த வட்டார நீதிபதியுமான ரிச்சர்ட் மேக்னஸ், பல அரசாங்கச் சேவைப் பொறுப்புகளில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதாகப் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

திரு மேக்னஸ், மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 77. அவரின் மறைவால் தாம் மிகுந்த சோகத்திற்கு ஆளானதாக திரு லீ தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேசிய தின விருதுகளில் திரு மேக்னசுடன் தாம் எடுத்துக்கொண்ட படத்தைத் திரு லீ பதிவேற்றம் செய்தார். திரு மேக்னசுக்கு மேன்மைதங்கிய சேவை விருது வழங்கப்பட்டது.

திரு மேக்னஸ், அயராது உழைக்கும் சிங்கப்பூரின் மகன் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகமும் தமது இரங்கல் செய்தியில் புகழராம் செலுத்தினார். ஓய்வுபெற்ற பிறகும் திரு மேக்னஸ் தமது வாழ்க்கையைப் பொதுச் சேவைக்கு அர்ப்பணித்ததைத் திரு சண்முகம் சுட்டினார்.

'கிருமித்தொற்று சம்பவங்கள்

அதிகரித்ததால் மரணங்கள் கூடின'

டெல்டா வகை கொவிட்-19 கிருமியுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானால் மரணமடைவதற்கான சாத்தியம் குறைவு. எனினும், கடந்த சில மாதங்களில் சிங்கப்பூரில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்ததால் அதனால் மரணமடைந்தோரின் எண்ணிக்கையும் கூடியதாக வல்லுநர்கள் கூறினர்.

குறிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரிடையே இந்தப் போக்கைப் பார்க்கமுடிந்ததாக தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் தலைமை இயக்குநர் பேராசிரியர் லியோ யீ சின் குறிப்பிட்டார்.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் கிருமித்தொற்றுக்கு ஆளான 95 பேர் மாண்டனர். சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை ஆகக் கடைசி நிலவரப்படி 1,058 பேர் மாண்டனர்;.

9,042 கிருமித்தொற்று சம்பவங்கள்

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் புதிதாக 9,042 கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாயின. கடந்த சுமார் ஒரு மாதக் காலத்தில் இரண்டாவது முறையாக 10,000க்கும் குறைவான புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாயின.

மேலும், வாராந்திர கிருமித்தொற்று விகிதம் 0.84க்குக் குறைந்தது. சுகாதார அமைச்சு தினமும் வெளியிடும் கொவிட்-19 புள்ளி விவரங்களில் இந்தக் தகவல்கள் இடம்பெற்றன.

கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் 1,310 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பதிவானதைவிட குறைவு.

கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் எட்டு பேர் மரணமடைந்தனர். 37 பேர் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 171 பேருக்கு செயற்கை சுவாச உதவி தேவைப்பட்டது.

கட்டுமான ஊழியர் மரணம்

ஹவ்காங் அவென்யூ மூன்றில் உள்ள கட்டுமானத் தளம் (படம்) ஒன்றில் கட்டுமான ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். தேவைக்கேற்பக் கட்டப்படும் ''ஹவ்காங் ஆலிவ்' வீவக வீட்டுக் கட்டுமானத் தளத்தில் சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. எஃகுப் பலகை ஒன்று தன் மீது விழுந்ததால் சீனாவைச் சேர்ந்த அந்த 43 வயது ஊழியர் மரணமடைந்தார்.

சம்பவம் நிகழ்ந்தவுடன் ஊழியர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். அவர் 'சாங் ஹுவா கன்ஸ்ட்ரக்‌ஷன்' நிறுவனத்தின் ஊழியர். சம்பவ இடத்தில் இருந்த சீனாவைச் சேர்ந்த மற்றோர் ஊழியரும் காயமடைந்தார்.

சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது.