சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வதற்கான எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு வல்லுநர்கள் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றனர்.
ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் உச்சத்தைத் தொட்டுவிட்டதை வல்லுநர்கள் இதற்கான காரணமாகக் கூறுகின்றனர். மேலும், சிங்கப்பூரில் பதிவாகிவரும் கிருமித்தொற்று சம்பவங்களில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று பேராசிரியர் ஃபிஷர் கூறினார்.
நேற்று முன்தின நிலவரப்படி உள்ளூரில் 8,941 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாயின. 101 பயணிகள் மட்டுமே கிருமித்தொற்றுக்கு ஆளாயினர்.
சிங்கப்பூர் விமானத்துறை மையமாக விளங்குகிறது. அதனால் 'விடிஎல்' எனும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதையை மட்டும் நம்பியிராமல் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்துப் பயணிகளையும் சிங்கப்பூர் அனுமதிக்கவேண்டும் என்று பேராசிரியர் தியோ குறிப்பிட்டார்.
மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன; இருந்தாலும் உலகளவிலும் உள்ளூரிலும் நிலைமையைக் கண்காணிக்கவேண்டும் என்று பேராசிரியர் லியோ கூறினார்.
சிங்கப்பூரில் எல்லைக் கட்டுப்பாடுகள் நேற்று மேலும் தளர்த்தப்பட்டன.

