சிங்கப்பூர் ஊழியர்கள் பத்தில் நான்கு பேர், மிகப் பெரிய போனஸ் எனும் ஊக்கத்தொகையைக் காட்டிலும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் ஏற்பாட்டை விரும்புவதாக அண்மைய ஆய்வில் கருத்துரைத்துள்ளனர். மனிதவளத் தீர்வுகளுக்கான ராண்ட்ஸ்டட் நிறுவனம் அந்தக் கருத்தாய்வை நடத்தியது.
ஏறக்குறைய ஈராண்டாய் வீட்டில் இருந்தே வேலைசெய்து வரும் நிலையில், கருத்தாய்வில் கலந்துகொண்ட ஊழியர்களில் 41 விழுக்காட்டினர் அவ்வாறு குறிப்பிட்டதாகத் தெரியவந்துள்ளது.
வீட்டில் இருந்தே வேலை செய்வதால் பயண நேரமும் செலவும் மிஞ்சுவது, கூடுதலான தனிப்பட்ட நேரம் கிடைப்பது, உற்பத்தித் திறன் அதிகரிப்பு ஆகிவற்றைக் கருத்தில்கொண்டு அவர்கள் அவ்வாறு கூறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆய்வில் கலந்துகொண்டவர்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினருக்கு 2022ல் சம்பள உயர்வு கிடைத்தது. அவர்களில் ஒன்பது விழுக்காட்டினருக்கு 20 விழுக்காட்டுக்கும் அதிகமான சம்பள உயர்வு கிட்டியது.
கலந்துகொண்டவர்களில் பாதிப் பேர் இந்த ஆண்டு போனஸ் கிடைக்கும் என்று கூறினர்.
அவர்களில் 43 விழுக்காட்டினர் சராசரியாக ஒன்று முதல் மூன்று மாதம் வரையிலான சம்பளத்தை ஊக்கத் தொகையாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். அத்துடன் 13ஆம் மாதச் சம்பளமும் அவர்களுக்குக் கிடைக்கும்.
ராண்ட்ஸ்டட் நிறுவனம் 2019ல் நடத்திய கருத்தாய்வில், 83 விழுக்காட்டினர் அந்த ஆண்டு போனஸ் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை முன்வைத்திருந்தனர்.
அவர்களில் 69 விழுக்காட்டினர் ஒன்று அல்லது இரண்டு மாதச் சம்பளத்தை போனசாக எதிர்பார்த்தனர்.
சம்பளம் மற்றும் போனஸ் பற்றிய எதிர்பார்ப்புகளுக்கான அண்மைய கருத்தாய்வு, பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இணையம் வழி நடத்தப்பட்டது. சிங்கப்பூரில் வேலைபார்க்கும் 300 ஊழியர்களின் கருத்துகள் திரட்டப்பட்டன.
அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணிபுரிய ஊழியர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதைச் சுட்டிய ராண்ட்ஸ்டட் நிறுவனம், முதலாளிகள் கிருமிப்பரவலுக்குப் பிந்திய வேலை நடைமுறைக் கொள்கைகளை கூடிய விரைவில் வகுத்துக்கொண்டால் ஊழியரணியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டது.
"பணியிடத்துக்கு நேரில் சென்றபோது காலை நேரப் போக்குவரத்து நெரிசலில் அடித்துப் பிடித்து அவசரப்பட வேண்டும். அத்தகைய நெருக்கடி வீட்டிலிருந்து வேலை பார்க்கும் அமைப்பில் இல்லை," என்றார் தனியார் துறை பொறியாளரான 51 வயது திரு மணிகண்டன் நாகராஜன்.
"நான் கர்ப்பிணியாக இருந்ததால் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது மிக உதவியாக இருந்தது. அதன் பிறகு எனக்குக் குழந்தை பிறந்தபோதும் அவனைப் பகுதிநேரமாகப் பார்த்துக்கொண்டு வேலையிலும் என்னால் கவனம் செலுத்த முடிந்தது," என்றார் வை-3
டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் மென்பொருள் தயாரிப்பவராகப் பணியாற்றும் 33 வயது திருமதி சிவசங்கரி சுப்பிரமணியம்.
"எட்டு மணிநேர வேலை முறையை வீட்டிலிருந்து வேலை செய்யும் அமைப்பில் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு நாளும் அதிக நேரம் வேலை செய்யும் கட்டாயம் ஏற்பட்டது.
"பணியிடத்தில் நேரடியாக வேலை செய்யும்போது நமது உழைப்பும் அர்ப்பணிப்பும் வெளிப்படையாகத் தெரியும்.
"வீட்டிலிருந்து வேலை செய்யும்போதோ இன்னும் கடினமாக உழைத்தால் மட்டுமே அங்கீகரிக்கப்படுவோம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது போன்று தென்படுகிறது. இதனால், நேரடியாக பணிபுரிவதையே நான் விரும்புகிறேன்," என்றார் 53 வயது திட்ட நிர்வாகி திரு டி.ஏ வெங்கடேஷ்.
கூடுதல் செய்தி:
ஆ. விஷ்ணு வர்தினி
சம்பளம் மற்றும் போனஸ் பற்றிய கருத்தாய்வில் 41% சிங்கப்பூர் ஊழியர்களின் எதிர்பார்ப்பு