சவரக் கத்தியால் காயப்படுத்திய ஆடவர்மீது குற்றச்சாட்டு
குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் சவரக் கத்தியைக் கொண்டு இருவரைக் காயப்படுத்திய ஆடவர் மீது, பயங்கரமான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் என்று காவல்துறை கூறியுள்ளது.
புளோக் 59, ஸ்ட்ராத்மோர் அவென்யூவில் நேற்று முன் தினம் அந்த 33 வயது ஆடவர் வழிப்போக்கர்களை காயப்படுத்தியது குறித்து மாலை ஆறேகால் மணிவாக்கில் தொலைபேசி அழைப்புகள் வந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.
அதிகாரிகள் அவரைக் கைது செய்யும் முன்பாக, 38 வயது ஆடவரையும், 49 வயதுப் பெண்ணையும் அவர் காயப்படுத்தியதாகக் கூறப்பட்டது.
அவரிடமிருந்த சவரக் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், தனக்குள் ஏதோ குரல்கள் கேட்டதாகவும் மக்களைத் தாக்கும்படி அந்தக் குரல்கள் சொன்னதாகவும் ஆடவர் கூறினார்.
துவாஸில் பிடிபட்ட 1,020 பெட்டி கள்ளச் சிகரெட்டுகள்
துவாஸில் சென்ற சனிக்கிழமை சிங்கப்பூர் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1,020 பெட்டிகளில் இருந்த தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாகன ஓட்டுநரான 29 வயது மலேசியர் கைதுசெய்யப்பட்டார்.
சுங்கம், பொருள், சேவை வரி என மொத்தம் 94,000 வெள்ளிக்கும் அதிகமான தொகை ஏய்க்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
சோதனை நடவடிக்கையின்போது, துவாஸ் சௌத் வாக் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்களை அதிகாரிகள் கண்டனர். மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட கனரக வாகனத்துக்குப் பின்னால் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் இருந்து கள்ளச் சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநர்மீது நீதிமன்ற விசாரணை தொடர்கிறது.
குடிபோதையில் டாக்சி ஓட்டுநரிடம் வம்புசெய்த ஆடவருக்கு அபராதம்
வேறொருவர் முன்பதிவு செய்திருந்த டாக்சியில் ஏறியதுடன் குடிபோதையில் டாக்சி ஓட்டுநரைத் துன்புறுத்திய ஆடவருக்கு 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, ஆஸ்திரேலியரான 52 வயது ஃபிரான்சிஸ் டையன் ஜேம்ஸ் ஒப்புக்கொண்டார். அதனையடுத்து நேற்று அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கும்போது, முகக்கவசம் அணியாதது, குடிபோதையில் சினமூட்டும் வகையில் நடந்துகொண்டது ஆகிய குற்றங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு ஜூன் 4ஆம் தேதி இரவு ஒன்பது மணிவாக்கில், போட் கீ வட்டாரத்தில் பயணிக்காகக் காத்திருந்தார் 49 வயது டாக்சி ஓட்டுநர் பர்விஸ் டே. அப்போது ஜேம்ஸ் அந்த வாகனத்தில் ஏற முயன்றார்.
அவர் முன்பதிவு செய்திருந்த பயணி அல்லர் என்பதை உணர்ந்ததும் டாக்சியில் இருந்து இறங்கும்படி டே கேட்டுக்கொண்டும் ஜேம்ஸ் செவிமடுக்கவில்லை.

