சிங்கப்பூரில் இப்போது பிரபலமாகிவரும் சரக்கு விநியோகத்திற்கான மோட்டார்சைக்கிள்கள், சாய்ந்து அமரும் இருக்கையுடன் கூடிய மிதிவண்டிகள் ஆகியவை தொடர்பில் புதிய விதிகளை அமல்படுத்த வேண்டுமா என்பது குறித்து, உந்து நடமாட்ட ஆலோசனைக் குழு பரிசீலித்துவருகிறது. சிங்கப்பூரின் நடைபாதைகளும் சைக்கிளோட்டப் பாதைகளும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வது அந்தக் குழுவின் பணி.
தனிநபர் நடமாட்டச் சாதனங்களை யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பதன் தொடர்பிலும் மேலும் கடுமையான விதிகளை விதிப்பது குறித்தும் அது ஆலோசித்து வருகிறது.
நடமாட்டப் பிரச்சினை இல்லாதவர்களும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவதாகப் புகார்கள் பதிவானதைத் தொடர்ந்து அவ்வாறு ஆலோசிக்கப்படுகிறது.
போக்குவரத்து அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளரும் உந்து நடமாட்ட ஆலோசனைக் குழுவின் தலைவருமான திரு பே யாம் கெங் நேற்று இந்தத் தகவல்களை வெளியிட்டார். அண்மையில் பிரபலமாகிவரும் போக்குகள் சிக்கல் விளைவிக்கும் பிரச்சினைகளாக உருவெடுக்கும் முன்பே குழு அதற்கான தீர்வுகளைத் திட்டமிடுவதாக அவர் குறிப்பிட்டார்.
எஸ்பிஎச் வானொலி நிலையமான ஒன் எஃப்எம் 91.3க்கு அளித்த பேட்டியில் அவர் அவ்வாறு கூறினார்.
தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் வாகன உரிமைச் சான்றிதழ் தேவைப்படாத மோட்டார் சைக்கிள்களைப் போல ஆகிவருவதாகக் குடியிருப்பாளர்கள் பலரும் புகார் அளித்ததாகத் திரு பே கூறினார்.
அதனால் புதிய விதிகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
2020ஆம் ஆண்டு நடைபாதைகளில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் மின்-சக்கர நாற்காலிகளுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அத்தகையவற்றை மருத்துவச் சிக்கல்கள் உள்ளவர்கள் பயன்படுத்துவது அதற்குக் காரணம். அத்தகைய விதிவிலக்கை யாரும் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில் புதிய விதிகள் குறித்துக் கலந்தாலோசிக்கப்படுவதாகத் திரு பே கூறினார்.

