ஸெங்குவா இயற்கைப் பூங்காவில் சேதமடைந்த கதவு வழியே காட்டுப் பன்றிகள் ஸெங்குவா குடியிருப்புப் பேட்டைக்குள் நுழைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்களின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.
புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர்கள் காட்டுப் பன்றிகளை எதிர்கொள்ள நேர்ந்தால் அமைதியாக அந்த இடத்தை விட்டு அகலும்படியும் அவற்றுக்கு உணவளிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதியின் ஸெங்குவா வட்டார நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் சியா பிங் ஹுய், குடியிருப்பாளர்கள் காட்டுப் பன்றியின் படங்களைத் தமக்கு அனுப்பியிருப்பதாக நேற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவர்களைப் போன்றே தாமும் கவலை அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பூங்காக் கழக அதிகாரிகள் கடந்த மூன்று வாரங்களாக இரவு வேளைகளில் காட்டுப் பன்றிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதாகவும் இப்போது ஒரே ஒரு ஆண் காட்டுப் பன்றி மட்டுமே அந்த வட்டாரத்தில் உலவுவதாக நம்பப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

