பொங்கோல் வட்டார உணவகம் ஒன்றில் வரிசையில் முந்திச் செல்ல முயன்ற இரண்டு ஆடவர்களிடம் விசாரணை இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்புற உணவை அங்கே உண்ணக்கூடாது என்று ஊழியர் சொன்னதும் உணவுத் தட்டைக் கீழே வீசி அவர்கள் கூச்சலிட்டதாகக் கூறப்பட்டது. முறையே 55 வயதும் 59 வயதும் நிரம்பிய அவ்விருவரும் பொது இடத்தில் அமைதியைக் குலைத்ததன் தொடர்பில் விசாரிக்கப்படுவதாகக் காவல்துறை கூறியது.
சென்ற சனிக்கிழமை இரவு எட்டரை மணியளவில் டெபிங் லேனில் உள்ள உணவகத்தில் இருந்து உதவிகேட்டு அழைப்பு வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். அதையடுத்து அங் மோ கியோ காவல்துறைப் பிரிவின் அதிகாரிகள் அங்கு சென்றனர். ஆடவர்கள் இருவரும் உணவக ஊழியரிடம் கூச்சலிடுவதும் அவரைத் தள்ளுவதும் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இருவரும் வேண்டுமென்றே உணவு வாங்கக் காத்திருந்தோர் வரிசையை அலட்சியப்படுத்தியதாகவும் ஊழியர் கவனிக்கும் முன்பே உணவக மேசையில் அமர்ந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
ஆடவர்களில் ஒருவர் புகைபிடித்ததாகவும் கூறப்பட்டது. ஊழியர் உணவக வளாகத்தில் புகைபிடிக்க அனுமதி இல்லை என்று கூறியதும் அங்கிருந்து சென்ற ஆடவர் வேறு இடத்தில் வாங்கிய உணவுப் பொட்டலத்துடன் அங்கு மீண்டும் வந்ததாகத் தெரிகிறது. அதை அனுமதிக்க இயலாது என்று உணவக ஊழியர் கூறியதையடுத்து ஆடவர் தட்டைக் கீழே வீசி எறிந்து கூச்சலிட்டதாகக் கூறப்பட்டது.

