கரிம மின்வர்த்தகத் தளம்
வர்த்தகங்கள் கரிமப் புள்ளிகளை வாங்கி விற்க வகைசெய்யும் மின்வர்த்தகத் தளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 'கிளைமேட் இம்பேக்ட் எக்ஸ்' எனும் சிங்கப்பூரில் இயங்கும் கரிமப் பங்குச் சந்தை இதை உருவாக்கியுள்ளது.
'பிராஜெக்ட் மார்க்கெட்பிளேஸ்' என்றழைக்கப்படும் இந்தத் தளம், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள திட்டங்களிலிருந்து கரியமிலப் புள்ளிகளை வாங்க வர்த்தகங்களுக்கு உதவுகிறது.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க கரிமப் புள்ளிகளை வாங்கி நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று உதவிக்கரம் நீட்ட கைகொடுப்பது இந்த முயற்சியின் இலக்கு. ஒரு கரிமப் புள்ளி, ஒரு டன் அளவு கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறிக்கும்.
'சமூக சேவையாளர்கள் திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்'
சமூக சேவையாளர்கள் அரசாங்க அமைப்புகளிடம் தங்களுடன் பணியாற்றுவோருக்காக உதவி கேட்கலாம் அல்லது வரையப்பட்டுள்ள திட்டங்களில் நீக்குப்போக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கலாம். இதுபோன்ற முயற்சிகளில் இடையூறு வந்தால் அது சமூக சேவையாளர்களுக்குச் சவாலாக அமையலாம்.
எனினும், இத்தகைய அரசாங்க அமைப்புகளைத் தங்களின் விருப்பத்துக்கு மாறாக இயங்கும் அமைப்புகளாகப் பார்க்காமல் அவை வரையும் திட்டங்களுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை சமூக சேவையாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் கூறியுள்ளார். மேலும், சமூகத்திற்கு உகந்த வகையில் சமூக சேவையாளர்கள் தங்களுடன் பணியாற்றுவோருக்காக வேண்டுகோள்களை விடுக்கவேண்டும் என்றும் அவர் சொன்னார்.
சமூக சேவையாளர்கள் திட்டங்களைப் புரிந்துகொண்டு தங்களுடன் பணியாற்றுவோரிடம் அவற்றைப் பற்றி விவரிக்கவேண்டும் என்று சமூக சேவை பயிற்சி பெற்றிருக்கும் டாக்டர் மாலிக்கி குறிப்பிட்டார். சமூக சேவை தினத்தை அனுசரிக்க அங் மோ கியோ அடித்தள நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் பேசினார்.
'சிங்கப்பூரின் பொருளியல்
அதிகம் பாதிப்படையாது'
கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்தாலும் தென்கிழக்காசியாவில் உள்ள இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரின் பொருளியல் அதிகம் பாதிப்படையாது என்று 'ஏடிபி' எனும் ஆசிய மேம்பாட்டு வங்கி கணித்துள்ளது. அந்த வங்கி வெளியிட்ட புதிய அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டது.
தென்கிழக்காசியாவின் பொருளியல் இவ்வாண்டு 5.1 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமிப் பரவலால் அது பாதிக்கப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
15,851 கிருமித்தொற்று சம்பவங்கள்
சிங்கப்பூரில் நேற்று முன்தினம் 15,851 கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாயின. தொடர்ந்து இரு நாள்களுக்கு 10,000க்குக் கீழ் பதிவான கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை நேற்று மீண்டும் கூடியது.
எனினும், பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் பதிவாகும் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை பதிவான எண்ணிக்கையைவிட நேற்று முன்தினம் பதிவானது குறைவாக இருந்தது.
வாராந்திர கிருமித்தொற்று விகிதம் 0.8க்குக் குறைந்தது.கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் 1,311 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் மரணமடைந்தனர். 40 பேர் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 191 பேருக்கு செயற்கை சுவாச உதவி தேவைப்பட்டது.

