கொவிட்-19 மட்டுமின்றி இதர நோய்களாலும் சிங்கப்பூரின் சுகாதாரக் கட்டமைப்பு தற்போது நெருக்குதலை எதிர்நோக்குவதாக தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் லியோ யீ சின் கூறியுள்ளார்.
மோசமாக நோய்வாய்ப்படுவோருக்கான ஒட்டுமொத்த சுகாதாரச் சேவைகளையும் கருத்தில்கொள்ளவேண்டும் என்றும் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானோர் மட்டுமின்றி அனைத்து நோயாளிகளையும் எவ்வாறு கவனிப்பது என்பதை ஆலோசிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதாரக் கட்டமைப்பின் நிலையைக் கூர்ந்து கவனிக்கவேண்டும் என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த மருத்துவர் பேராசிரியர் டேல் ஃபிஷர், தொற்றுநோய் வல்லுநர் பேராசிரியர் டியோ யிக் யிங் ஆகியோர் கூறினர்.
எனினும், கொவிட்-19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தினால் அதனால் சுகாதாரக் கட்டமைப்புக்கு அதிக பாதிப்பு ஏற்படாது என்று அவர்கள் சுட்டினர். ஆனால், கொவிட்-19 நிலைமை மோசமடைந்தால் கட்டுப்பாடுகளை முடுக்கிவிடும் அவசியம் ஏற்படலாம். அதற்கும் சிங்கப்பூர் தயாராய் இருக்கவேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் தொடர்பிலான கலந்துரையாடலில் இந்த மூன்று சுகாதார வல்லுநர்களும் கலந்துகொண்டு பேசினர்.

